வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (12/12/2017)

கடைசி தொடர்பு:15:26 (12/12/2017)

பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

 

ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வெடிகுண்டில் நான் வாங்கிக் கொடுத்த பேட்டரியே பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. இதனால் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். 

இந்தநிலையில், அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சய் கோகாய், பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பேட்டரி எதற்காக வாங்கித்தரப்பட்டது என்பதை பேரறிவாளனிடம், தான் விசாரிக்கவில்லை என சி.பி.ஐ. விசாரணை அதிகாரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகக் கூறினர். ஆனால், பெல்ட் வெடிகுண்டு தயாரித்தவர்கள் யார்? அது எப்படி இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், பேரறிவாளன் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளிக்க முடியாததால், சி.பி.ஐ. விசாரணை அதிகாரி அளித்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறினர். அதேபோல், சி.பி.ஐ. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையின் நகலை பேரறிவாளனுக்கு வழங்க அனுமதி அளித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை புழல் மத்திய சிறைக்கு விரைவில் மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.