`என் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது!’ - தீர்ப்பு குறித்து நெகிழ்ந்த கௌசல்யா | kousalya welcomes Tirupur court judgement

வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (12/12/2017)

கடைசி தொடர்பு:15:53 (12/12/2017)

`என் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது!’ - தீர்ப்பு குறித்து நெகிழ்ந்த கௌசல்யா

சங்கர் கொலைவழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாகச் கௌசல்யா தெரிவித்தார். 


உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு தூக்குத்தண்டனையும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் மற்றும் ஒருவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
நீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கௌசல்யா, `என் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைக்க ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்தவகையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறேன். அதுவும், கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்பு வரும்வரை குற்றவாளிகளை நீதிமன்ற காவலிலேயே வைத்திருப்பது அரிதினும் அரிது. பெரும்பாலான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தூக்குத்தண்டனை குறித்த எனது கருத்து வேறாக இருந்தாலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு இதுவே சரியான தீர்ப்பாக இருக்கும்.

இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் வரை எனது சட்டப் போராட்டம், களப் போராட்டம் ஓயாது. சங்கர் கொலைக்கு இதுமட்டுமே நீதியாகாது. சாதி ஆணவக் கொலைகளுக்கு தனி சட்டம் கொண்டுவரப்படுவதே இதுபோன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்கும். அதுவே சங்கர் கொலைக்கு சரியான நீதியாக இருக்கும். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்திலேயே அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதனால், எனக்கும், சங்கர் குடும்பத்தினர் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. எங்களுக்கு உரிய பாதுகாப்பைக் காவல்துறையும் நீதித்துறையும் வழங்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் எனக்கு உதவியை அனைவருக்கும் நன்றி’' என்றார்.