வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (12/12/2017)

கடைசி தொடர்பு:20:00 (12/12/2017)

எமனான 'மோனோ குரோட்டாபாஸ்' ! கலெக்டர் அலுவலகத்தில் கொந்தளித்த விவசாயிகள்

பெரம்பலூரில் பருத்தி வயலில் மருந்து அடித்தபோது ஐந்து விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரையிலும் அரசு சார்பில் எந்த நஷ்டஈடும் வழங்கவில்லை என்று பாதிக்கபட்ட தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                         

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலில் மோனோ குரோட்டாபாஸ் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும்போது அதன் விஷம் தாக்கி, ஏற்கெனவே சித்தளியைச் சேர்ந்த ராஜா, ஒதியம் செல்வம், பசும்பலூரைச் சேர்ந்த அர்ஜூனன், கூத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என 5 பேர் இறந்துள்ளனர்.

                     

 

நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுதும் கூட பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஒரு மாதத்தில் மட்டும் 30 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

                                  

பூச்சிக்கொல்லி மருந்து அடித்தபோது இறந்த அர்ஜூனனி மகன் நல்லபெருமாளிடம் பேசினோம். "எங்க அப்பா மோனோ குரோட்டாபாஸ் மருந்தை குடத்தில் கலக்கியபோது மருந்தின் வீரியம் தொண்டை, வாய், கண்ணில் ஏறியிருக்கிறது. எப்போது ஒரு நாளைக்கு 30 கேனுக்கும் மேல் மருந்தை அடிப்பவர் மருந்தின் தாக்கத்தால் அவரால் மூன்று கேனுக்கும் மேல் மருந்தை அடிக்கமுடியாமல் நிலத்திலேயே மயங்கிவிழுந்துவிட்டார். பின்பு அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன்றி இரண்டாவது நாளே இறந்துவிட்டார். இதுபோல் இம்மாவட்டத்தில் மட்டும் ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால் மாவட்ட தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது. அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் இறந்த குடும்பங்களையும் ஆட்சியர் சந்தித்துகூட பேசாதது வேதனையாக இருக்கிறது. மோனோ குரோட்டாபாஸ் மருந்தை 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் சுதந்திரமாக கிடைத்துக்கொண்டிருக்கிறது.

                          

மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் பலர் இறந்திருக்கிறார்கள். பெரம்பலூரில் மட்டும் ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள். அப்போ இது யார் மீது தவறு. அரசு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் யாரும் பாதித்திருக்க மாட்டார்கள். அரசு அதன் வேலையைச் சரியாகச் செய்யாததால்தான் இறந்து போனார்கள். பூச்சிக்கொல்லி மருந்தால் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடுவழங்க வேண்டும். இனியும் பாதிக்காமல் இருக்க இந்த மோனோ குரோட்டாபாஸ் மருந்தை  தடைச் செய்ய வேண்டும் இல்லையேல் அலட்சிய போக்கில் இருக்கும் இந்த அரசுகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்து " முடித்தார்.