வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (12/12/2017)

கடைசி தொடர்பு:17:39 (12/12/2017)

''கண் முன்னாடியே உலவினாங்க... அதான் கொன்னோம்!”  - ஒப்புக்கொண்ட பின்னும் கவுசல்யாவின் தாய் விடுதலையா?

சூப்பர் ஸ்டார் ஒருவரின் பிறந்தநாள் என்பதைக் கடந்து வரலாற்றில் இன்றைய தினம் முக்கியமான நாளாகவே பார்க்கப்படும். காரணம் இருவேறு ஆணவக் கொலைகளுக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்பு காதல் திருமணம் செய்ததற்காக, சங்கரும் கவுசல்யாவும் உடுமலைப்பேட்டையில் 2016 மார்ச் மாதம் பொதுவெளியில் அரிவாளால் வெட்டப்பட்டார்கள். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். படுகாயமடைந்த கவுசல்யா அதிலிருந்து மீண்டுவர நீண்டநாள் ஆனது. சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்று திருப்பூர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.  இதுபோன்று கேரள மாநிலத்திலும் ஒரு வழக்கு.... தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஜிஷா என்கிற 30 வயது சட்டக்கல்லூரி மாணவி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமீருல் இஸ்லாம் 'குற்றவாளி' என்பதை கேரள நீதிமன்றம் இன்றையதினம் உறுதி செய்துள்ளது. மேலும், தண்டனை தொடர்பான விவரங்கள் நாளை அறிவிக்கப்பட இருக்கின்றன. கவுசல்யா சங்கர் வழக்கை விசாரித்த நீதிபதி  அலமேலு நடராஜன், “இது பணத்துக்காக நிகழ்த்தப்பட்ட கொலை அல்ல... திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆணவப் படுகொலை'' என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கவுசல்யா

சங்கர் கொலை வழக்கில், 8 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமியும் தாய்மாமன் பாண்டித்துரையும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். கோவை சிறையில் அன்னலட்சுமி இருந்த காலத்தில், அங்கே சிறையில் இருந்த தோழர் வளர்மதிவளர்மதி கூறுகையில், “ நான் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் அங்கேதான் அன்னலட்சுமியும் இருந்தார். தனது மகளின் கணவரைக் கொலை செய்தது பற்றியான எவ்விதக் கவலையும் அவருக்கு இல்லை. 'எங்களை எதிர்த்து கல்யாணம் செய்துகொண்டு எங்கள் முன்னாடியே உலவிக் கொண்டிருந்தாள். அவர்களை வேறு என்ன செய்வது...' என்று சிறையில் தன்னுடன் இருந்தவர்களிடமே பேசிக் கொண்டிருந்தார் அவர். மேலும் சிறையில் தன்னுடைய ஆட்சிதான் என்பது போல அங்கே தனக்கென ஒரு கேங்கை உருவாக்கி வைத்திருந்தார். இப்படி வெளிப்படையாக 'தான் குற்றவாளி' என ஒப்புக்கொண்டவரை ஏன் விடுதலை செய்யவேண்டும்? அவர்கள் கவுசல்யாவுக்கு அச்சுறுத்தல் தரத் தயங்கமாட்டார்கள். எனவே அன்னலட்சுமி விடுதலை தொடர்பாக நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்றார். 

எவிடென்ஸ் கதிர்இந்த இருவேறு வழக்குகளிலும் கள ஆய்வு மேற்கொண்டு பலவகையில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ’எவிடென்ஸ்’ கதிர் கூறுகையில், “ஜிஷா வழக்கு மற்றும் கவுசல்யா வழக்கு இரண்டிலுமே ஆதாரங்கள் வலுவாக இருந்தன. முக்கியமாக உடுமலைப்பேட்டை வழக்கில் சி.சி டிவி வீடியோ ஆதாரங்கள் இருந்ததினால், வழக்கு வலுபெற்றது. மேலும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நான்குபேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டது. இல்லையென்றால், அரியலூர் நந்தினி வழக்கும் தஞ்சாவூர் கலைச்செல்வி வழக்கும் போல சங்கர் கொலை வழக்கும் மாறிவிட்டிருக்கும். இவ்வளவு வலுவாக இருந்தேகூட சின்னசாமி தரப்பினர் 58 முறை பெயில் கோரினார்கள். ஒவ்வொரு முறையும் பெயிலுக்கு எதிராக நாங்கள் எதிர்ப்புக் குரல் பதிவு செய்யவேண்டியதாக இருந்தது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் இயற்றச் சொல்லி உச்சநீதிமன்றம்கூட வலியுறுத்திவிட்டது. ஆனால், அரசு தரப்புதான் இதில் அலட்சியம் காட்டிவருகிறது. இதுபோன்ற கொலைவழக்கு விசாரணைக்கு அமைக்கப்படும் குழுக்கள் கூட சிறப்புக் குழுக்களாக இல்லாமல், சாதாரணமானவையாகவே இருக்கின்றன. சட்டத்துக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியே இதற்குக் காரணம்.  நிர்பயா வழக்குக்குப்பிறகே இங்கு பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் வலுபெற்று வருகின்றன. அதுபோல கவுசல்யா சங்கர் வழக்குக்குப் பிறகாவது இப்படியான சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டங்கள் வலுவாக இயற்றப்படவேண்டும். கவுசல்யா வழக்கு போன்று வீடியோ ஆதாரங்கள் இருந்தால்தான் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றில்லாமல், குற்றத்தின் தன்மையை உணர்ந்து நீதிமன்றம் செயல்படவேண்டும்” என்றார். 

தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த கவுசல்யா ''தூக்கு தண்டனைக் குறித்து என்னுடைய கருத்து வேறாக இருந்தாலும் இந்தத் தீர்ப்பு சாதி ஆணவக் கொலைகாரர்களுக்கு மனத்தடையையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்” என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார். 

பெரியார் சொன்னதுதான்... 

'மதம், மனிதனை மிருகமாக்கும்; சாதி, மனிதனைச் சாக்கடையாக்கும்'. 

சாக்கடை என்றாலே அகற்றித்தானே ஆகவேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்