வெஸ்ட் இண்டீஸை வைட்வாஷ் செய்தது நியூசிலாந்து #NZvsWI

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியை, நியூசிலாந்து அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என வென்று, வெஸ்ட் இண்டீசை வைட்வாஷ் செய்தது. 

நியூசிலாந்து

ஹாமில்டனில், 9-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த அணியின் ஓப்பனர் ஜீத் ராவல், நிதானமாக விளையாடி 84 ரன்கள் எடுத்தார். முதல் போட்டியில் சதமடித்து அசத்திய ஆல்ரவுண்டர் கிராந்தோம், அரைசதம் விளாசினார். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காவிடிலும், கடைசிக் கட்டத்தில் டிம் சவுத்தி, ட்ரென்ட் போல்ட் கைகொடுக்க, அந்த அணி 373 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தது. கேப்டன் க்ரெய்க் ப்ராத்வெய்ர் மட்டும் கொஞ்சம் தாக்குப்பிடித்து 66 ரன்கள் எடுத்தார். அந்த அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. போல்ட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

ராஸ் டெய்லர்

இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்தில் நியூசிலாந்து கொஞ்சம் தடுமாறியது. ஆனால், அனுபவ வீரர்களான கேப்டன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர். வில்லியம்சன் 54 ரன்களில் வெளியேறினார். ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 107 ரன்கள் எடுத்தார். இது டெய்லரின் 17-வது சதம். நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 444 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ், மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி, 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 240 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றியது. ராஸ் டெய்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!