“மகள்களை வளர்க்க கடலுக்குள் போராடுகிறேன்!” - ‘பெண் மீனவர்’ ரேகா

திகாலை நேரம் அரபிக்கடல் அமைதியாகக் காட்சியளிக்கிறது. படகை, கயிற்றில் இருந்து அவிழ்க்கிறார் அந்தப் பெண். படகில் நைலான் வலைகள் இறைந்து கிடக்கின்றன. ஒற்றை இன்ஜின் கொண்ட  அந்தப் படகு, தண்ணீரைக் கிழித்து கடலுக்குள் சீறிச் செல்கிறது. சூரியன் மறைவதற்குள் கரை திரும்புகிறார். படகு நிறைய மீன்கள். `தரைமேல் பிறக்கவைத்தான்... எங்களைத் தண்ணீரில் பிழைக்கவைத்தான்...' என்ற பாடல் கே.சி.ரேகாவுக்கு அப்படியே பொருந்தும். இந்தியாவில் உரிமம் பெற்ற முதல் பெண் மீனவர் இவர்தான். 

கடலில் மீன் பிடிக்கும் பெண் மீனவர் சசிரேகா

Photo courtesy: Vivek H. Nair H/T

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேத்வா என்கிற கிராமத்தைச் சேர்ந்த ரேகா, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றது ஒரு விபத்துபோல்தான். பத்து வருடங்களுக்கு முன், ரேகாவின் கணவர் கார்த்திகேயனுடன் வேலைபார்த்த இருவர் வேலையில் இருந்து நின்றுவிட, ஆள் கிடைக்காமல் திண்டாடினார். அப்போது, `ஏன்... நான் உங்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க வரக் கூடாது' என்று கணவரிடம் ரேகா கேட்டிருக்கிறார். சுற்றியிருந்த சமுதாயமோ, ரேகா கடலுக்குள் செல்லக் கூடாது எனத் தடுத்துள்ளது. ``பெண் என்பவள், கரையில்தான் இருக்க வேண்டும்; கடலுக்குள் சென்ற கணவர் நல்லபடியாகத் திரும்பி வரவேண்டும் என்று கடலம்மாவை வேண்டிக்கொள்ள வேண்டுமே தவிர, கடலுக்குள் சென்று மீன் பிடிக்க ஆசைப்படக் கூடாது'' என்றது. 

கணவர் கார்த்திகேயன், மனைவியின் ஆசைக்கு உறுதுணையாக இருந்தார். மனைவியை கடலுக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினார். நீரோட்டத்தை எதிர்த்து நீச்சலடிப்பது, படகைச் செலுத்துவது, வலையை லாகவமாக வீசுவது, வீசிய வலையை விரைவாக இழுப்பது என, மீன் பிடிப்பதில் உள்ள நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தார். நாளைடைவில், ஆண்களுக்கு இணையாக சிறந்த மீனவராக உருவெடுத்த ரேகா, தனியாகவே கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லத் தொடங்கினார்.

தினமும், அலைகளை எதிர்த்து அரபிக்கடலில் தனி ஆளாக 20 முதல் 30 நாட்டிகல் மைல் தொலைவு சென்று மீன் பிடிக்கிறார். சில சமயம் கார்த்திகேயனும் ரோகாவும் சேர்ந்து செல்வதுண்டு. இந்த நவீன காலத்திலும் ரோகாவின் படகில், காம்பஸ், ஜி.பி.எஸ் போன்ற எந்தக் கருவியும் கிடையாது. காற்றும் அலையும் சூரியனும்தான் வழிகாட்டிகள். 45 வயது ரேகாவுக்கு மீன் பிடிப்பதில் 10 வருட அனுபவம் இருக்கிறது.  அனுபவமும் கடலம்மாவின் கருணையும்தான் தன்னைக் காப்பாற்றுவதாக ரேகா நம்புகிறார். 

கேரளாவில் உப்பங்கழிகளிலும், குளங்களிலும் ஆற்றிலும் பெண்கள் படகில் சென்று மீன் பிடிப்பதை சாதாரணமாகக் காண முடியும். ஆனால், கடலில் சென்று மீன் பிடிக்கும் ஒரே பெண் இவர்தான். கடந்த ஏப்ரல் மாதம் மத்திய கடல் மற்றும் மீன்கள் ஆராய்ச்சி மையம் ரோகாவுக்கு விழா எடுத்துப் பாராட்டியது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சுதர்சன் பகத் ரேகாவுக்கு `இந்தியாவின் முதல் பெண் மீனவர்' உரிமம் வழங்கி கௌரவித்தார்.  

இந்த மையத்தின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் ரேகாவின் துணிச்சலைப் பாராட்டி, இந்தக் கௌரவத்தை அளித்துள்ளோம். அவரின் மூத்த மகள் மாயாவின் 12-ம் வகுப்பு படிப்புச் செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை ஸ்காலர்ஷிப்பும், மீன் பதப்படுத்தும் சிறிய அளவிலான கூடமும் வழங்கி உதவி செய்துள்ளோம்''  என்றார்.

ரேகாவுக்கு நான்கு பெண் குழந்தைகள். இந்தப் பெண்களை கரை சேர்க்கவே அவரும் கடலுக்குள் போராடிக்கொண்டிருக்கிறார். தன் மகள்களுக்கு முடிந்தவரை நல்ல கல்வி அளிப்பதுதான் அவரின் லட்சியம். “கடலுக்குள் செல்வது ஆபத்து நிறைந்ததுதான். ஒருமுறை, பெரிய படகு ஒன்று எங்கள் படகின் மீது மோதப் பார்த்தது. சமயோசிதமாகச் செயல்பட்டு படகைத் திருப்பித் தப்பினேன். இன்னொரு முறை, இன்ஜின் கோளாறால் ஆறு மணி நேரம் கடலுக்குள் தவித்தேன். கடலம்மா என்னைக் கைவிட மாட்டாள். நம்பிக்கையை எப்போதும் நான் இழப்பதில்லை.

நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இருவர் வீட்டிலும் எங்களைத் துரத்திவிட்டனர். எங்கள் வாழ்க்கை, தரையிலும் போராட்டம் நிறைந்ததுதான். தண்ணீரிலும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. சவால்கள் எங்களுக்குப் பழகிவிட்டன'' என்கிறார் தீர்க்கத்துடன்.

மீனவர்கள் சந்திக்கும் சவால்களுக்கு விளக்கம் தேவையில்லை. சவால் நிறைந்த பணியில் வெற்றிக்கொடி நாட்டும் ரேகா தைரியமிக்கப் பெண்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!