வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (13/12/2017)

கடைசி தொடர்பு:18:29 (13/12/2017)

இயங்காத செல்போன் டவர்கள்... பொம்மையான வாக்கி டாக்கிகள்.. மீனவர்கள் இறக்க அரசின் அலட்சியம் காரணமா?! #VikatanLens

சுனாமி சீற்றத்துக்குப் பின் தமிழக மீனவர்களை பெரிதும் பாதித்திருக்கிறது ‘ஒகி’ புயல். மீன்பிடிப்புக்காக கடலுக்குள் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதி வெளிப்பட்ட 'ஒகி'யின் வேகத்தில் திசைக்கு ஒருவராகப் பிரிந்தனர்,  அவர்கள் பயணித்த பெரும்பாலான படகுகள் கரை திரும்பவில்லை. டிசம்பர் இரண்டாம் வாரம் வரையில், அப்படிப் பிரிந்துபோன மீனவர்கள் குறித்த தகவல்கள் யாருக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

Walkie Talkie

உறவுகளைத் தேடித்தேடி களைத்துப் போய்க் கிடக்கின்றன நாகை, குமரி மாவட்டத்தின் 44 மீனவ கிராமங்கள். வீதிக்கு வீதி அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கடலுக்குப் போன தந்தை, அண்ணன், தம்பிகளின் வருகையை எதிர்பார்த்துக் கரைக்கு வெளியே குரல்வற்றிக் கிடக்கின்றன, ஆயிரம் உறவுகள். கடலுக்குள் இருக்கும் (?) உறவுகளுக்கு இந்த உறவுக் குரல்கள் கேட்டிருக்குமா என்பது இந்த நிமிடம் வரையில்  கேள்விக்குறியே.

ஒகி வருவதற்கு முன்பும் பலமுறை புயல்கள் வந்திருக்கிறது, அப்போதும் மீனவர்கள்  கடலில் இருந்திருக்கிறார்கள். ஆனால், இறக்கவில்லை,  இப்போது போல் அப்போது காணாமல் போகவில்லை, அது ஏன் ?... இப்படியொரு கேள்வியை மீனவர்கள் மத்தியில் எழுப்பியபோது, "எல்லாமே நம்பிக்கைதானே சாமீ, முதலில் நாங்கள் கடலுக்குள் போகும்போது எங்களிடம் செல்போன் மட்டும் இருக்கும்.  சின்ன சைஸ் மோட்டோரோலோ செல்போன்தான்  வைத்திருப்போம்.  அந்த செல்போன் டவர் எவ்வளவு தூரம் வேலை செய்யும் என்று எங்களுக்குத் தெரியும், அந்த தூரத்துக்கு உண்டான எல்லைக்குள் நின்று வலை போடுவோம். மீன்கள் சிக்கினாலும், சிக்காமல் போனாலும் கரையேறி விடுவோம்.

இப்போது நாங்கள் செல்போனைப் பயன்படுத்துவது இல்லை. ரொம்பதூரம் உள்ளே போவதும் இல்லை. 2010-ம் வருடம், தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் கே.பி.பி.சாமி, பாம்பன், தொண்டி, ஏர்வாடின்னு ராமநாதபுரத்தில் மூன்று இடத்தில் செல்போன் டவர் வைத்துக் கொடுக்கப் போவதாகத் தெரிவித்தார். சொன்னபடியே செய்தும் கொடுத்தார். மீனவர்களுக்காக அப்போது 3,300 வாக்கி டாக்கி கொடுக்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் கருணாநிதி  நிதி ஒதுக்கி இருப்பதாகவும் அமைச்சர் சாமி கூறினார். கொஞ்ச நாளில், பொதுத்தேர்தல் வந்தது, அதன்பிறகு அந்த மூன்று டவரோடு திட்டம் நின்று போனது. எங்களிடம் கொடுத்த வாக்கி டாக்கிக்கும் வேலை இல்லாமல் போனது. டவரே (செல்போன் கோபுரம்) இல்லாமல் வெறும் வாக்கி - டாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?" என்றனர், வேதனையுடன். 

மீனவர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுக் குறித்தும் விசாரித்தோம். “மீனவர்கள் கடலில் போய் பாதுகாப்பாக தொழில் செய்யவும், இதுபோன்ற பேரிடர் காலங்களில் செல்போன் கோபுரம் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும்தான் அவர்களுக்கு வாக்கி - டாக்கி வழங்கும் திட்டம், தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதேபோல், அவர்கள் படகுகளில் சிறப்பு ரேடியோ கருவி பொருத்தும் திட்டமும் கொண்டு வரப்பட்டது. இதை 'பைலட் ஸ்கீம்' (பரிசோதனை திட்டம்) என்ற பெயரில்தான் மீனவர்கள் குறிப்பிட்ட ராமநாதபுரத்தின் மூன்று பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டன.

Walkie Talkie

வாக்கி டாக்கி மற்றும் ரேடியோ கருவிகள் செயல்பாடு கரையிலிருந்து 80 கிலோ மீட்டர் தூரம் வரையில் சோதிக்கப்பட்டது.  இந்த 'பைலட் ஸ்கீம்' திட்டத்துக்கு ஏழேமுக்கால் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்தச் சோதனை முயற்சி வெற்றிகரமாக இருந்ததை,  ராமநாதபுர மீனவர்கள் மூலமாக அறிந்த பிறமாவட்ட மீனவர்களும், அரசு அதிகாரிகளும் மகிழ்ந்தனர். உடனடியாக இதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தக் கேட்டுக் கொண்டனர். அந்த அடிப்படையில் திட்டம் விரிவுபடுத்தும் வேளையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தொழில்நுட்பத்தில் இதுவரை 'சொதப்பல்' செய்யாத 'எல்காட்' நிறுவனத்திடம் அந்தத் திட்டப்பணியை தி.மு.க. கொடுத்திருந்தது. ஆட்சி மாற்றத்தால் 'எல்காட்' கையிலிருந்த அந்த ஒப்பந்தம் வேறு நிறுவனத்துக்கு மாறியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மீன்வளத்துறை நேரடி பொறுப்பின் கீழ்தான் இந்தத் திட்டப்பணி மாற்றி விடப்பட்டது.

திட்டத்தை மாற்றியபின்,  புதிதாக ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி, மீண்டும் முதலில் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரி வேறு ஒரு நிறுவனத்தின் கையில் செல்போன்கோபுரம் நிறுவல், வாக்கி-டாக்கி மற்றும் ரேடியோ வழங்கல் ஆகிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. அந்தக் கூட்டத்தில் கடலோரக் காவல்படை, தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்பப்பிரிவு, மீன்வளத்துறை உள்ளிட்ட எட்டு துறைகளின் உயரதிகாரிகள் அதில் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில், கடலோரக் காவல் படை உயரதிகாரிகள் சிலரும், தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்பப்பிரிவு சூப்பிரண்டு அன்புச்செழியனும், ஆரம்பம் முதலே சில விவரங்களை அங்கே வலியுறுத்தினர். ‘செல்போன் கோபுரங்களை கடலோர மாவட்டக் கடற்கரைகளில் 21 இடங்களில் நிறுவினால் மட்டுமே மீனவர்களை நம் கண்காணிப்பில் வைத்திருக்கலாம், இதில் எண்ணிக்கை 25 ஆக கூடினால் இன்னும் நல்லது. அதே வேளையில் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தாலும் அது குறிப்பிட்ட கடல் எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தும். மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றால், கண்காணிப்புக் கோபுரம் போல் இருக்கும் செல்போன் டவர் மூலம் நமக்குத் தகவல் வரும், புயல் போன்ற இயற்கைப்  பேரிடர் என்றாலும் தகவல் வரும் நாம் அவர்களை உடனடியாக எச்சரிக்கை செய்து காப்பாற்றலாம். ரேடியோ கருவிகள் மூலம் மீன்கள் எங்கு அதிகம் இருக்கிறது என்பதையும் தெரிவித்து அவர்களை வழி நடத்தலாம். அனைத்துக்கும் முக்கியத் தேவை செல்போன் கோபுரமாக இருக்கும் தொடர்புக்கான கரையோர 'டவர்' தான். அதைத்தான் முதலில் நிறுவ வேண்டும். அதன்பின்னரே வாக்கி டாக்கி மற்றும் ரேடியோ கருவிகளை நாம் மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். முன்னதாக அதை மீனவர்களுக்குக் கொடுத்துவிட்டு செல்போன் கோபுரம் அமைப்பதில் தாமதம் ஆனால், அந்தக் கருவிகள் செயலற்றுப் போய்விடும்' என்றெல்லாம் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசியுள்ளனர்.

நேர்மையாகவும், மீனவர்களின் உயிர்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும் பேசிய அந்த அதிகாரிகளின் குரல் எடுபடவில்லை என்பதே அடுத்து வந்த சம்பவங்கள் நிரூபித்தன. கடலோர  கடற்கரை மாவட்டங்களில் 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 21 செல்போன் கோபுரங்கள் நிறுவும் திட்டம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமலே மீனவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. 45 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தலா 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வாக்கி- டாக்கிகளை 20 ஆயிரம் மீனவர்களுக்கு கொடுத்து முடித்துள்ளது அரசு. அந்தக் கருவிகளை மீனவர்கள் கையில் வைத்திருப்பதும், சாதாரண செல்போனைக் கையில் வைத்திருப்பதும் ஒன்றுதான். மீனவர்களுக்காக பிரத்யேக செல்போன் கோபுரங்களை நிறுவாமல் அந்தக் கருவிகளுக்கு 'டவர்' கிடைக்க வாய்ப்பே இல்லை.

கடலோர கடற்கரை மாவட்டங்களில் 50 கிலோ மீட்டருக்கு ஒரு டவர் என்ற கணக்கில் திட்டமிடப்பட்ட அந்த செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப் படவே இல்லை. அதை இந்த டிசம்பர் மாதம் தொடங்கினாலே முழுமை பெற, இன்னும் மூன்றாண்டுகள் தேவைப்படும் என்பதே பணிக்கான நடைமுறை சொல்லும் உண்மை. ஒரு மாத காலம் வரை பயன்படுத்தாமல் வைத்திருந்தாலே பயனற்றுப் போகக் கூடிய வாக்கி -டாக்கிகள், படகுகளில் பொருத்தும் ரேடியோ கருவிகள், மீனவர்களின் கைக்கு வந்தே பல மாதங்கள் ஆகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்ட பிறகு அந்தக் கருவிகள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் விளையாடக்கூட தகுதியற்ற ஒன்றாக மாறிப் போயிருக்கும் என்பதே உறுத்துகிற உண்மை. அந்த செலவீட்டுத் தொகை 45 கோடி ரூபாய், இனி நஷ்டக் கணக்கில்தான் எழுத வேண்டிவரும் என்ற நிலையில், அதை  தலா 30 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் அதே எண்ணிக்கையில் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரேடியோ கருவிக்காக ஒதுக்கப் பட்ட தொகையும், இப்போது அதனால் ஏற்பட்டுள்ள தொகையும் எத்தனை கோடி என்ற இன்னொரு தனி கணக்கும் அரசின் நஷ்டக் கணக்கில்தான் சேர்க்கப்படும்.

மீனவர்கள்

''இதுவரை 462 மீனவர்கள் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது'' என்கிறார் குமரி மாவட்டகலெக்டர் சஜ்ஜன்சிங் சவான். 'கடைசி மீனவன் கிடைக்கும் வரை தேடுதல் பணி தொடரும்' என்கிறார், மீன்வளத்துறை மந்திரி ஜெயகுமார். 'மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் கைவிடாது' என்கிறார், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன். 'காணாமல் போன மீனவர்கள் குறித்த முழு விபரமும் தனி குழு அமைத்து அவர்கள் மூலம் சேகரிக்கப் பட்டு வருகிறது, முப்படைகளும் தேடுதல் பணியில் இருக்கின்றன' என்கிறார் தமிழ்நாட்டு முதல் மந்திரி எடப்பாடி பழனிசாமி.' குமரி மாவட்டத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்' என்று மத்திய அரசிடம் உதவி கேட்டதோடு, நிலையை மத்திய அமைச்சர்களுக்கும்  விளக்கிச் சொல்லியிருக்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், “மீனவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகள் வாங்கியதில் நிறுவனங்களுக்கு இடையே நடந்த குதிரை பேரத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது, தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதைக் கைகழுவி விட்டு மீனவர்கள் சாக இந்த அரசு காரணமாக இருந்திருக்கிறது. நாளை ஆளுநரைச் சந்தித்து முறையிடப் போகிறோம்" என்று கொந்தளித்து இருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

கருவிகளை தொலைத்துவிட்டு கண்களால் தேடிக் கொண்டிருக்கிற இதயங்களே... உங்கள் இதயங்களை மக்கள்  கண்களால்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... ஹோ... ஹோ... என்று கூவிக்கூவி கடலில் வலைவீசி மீன்களை அழைக்கும் மீனவர்கள், இன்று கரைகளில் நின்று அதே குரலில் கடலுக்குள் இருக்கும் உறவுகளை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்... அந்த அழைப்பின் பின்னால் இருந்தது வேறு, இந்த அழைப்பின் பின்னால் இருப்பது வேறு என்பதை உங்களால் உணர முடிகிறதா ஆட்சியாளர்களே?

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்