வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (13/12/2017)

கடைசி தொடர்பு:13:44 (13/12/2017)

‘சங்கர் எனக்கு ஆண் தாய்’ சங்கர் பற்றிய கெளசல்யாவின் பதிவுகள் #KausalyaSankar

கெளசல்யா

உடுமலை கெளசல்யா - தனது வாழ்க்கையை ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு என மாற்றிக்கொண்டவர். தான் விரும்பி, நேசித்துத் திருமணம் செய்துகொண்ட சங்கரை, தனது பெற்றோர் தரப்பே கொலை செய்யும் என அவர் நினைக்கவில்லை. இருவரும் வேறு வேறு சாதி என்பதால், திருமணத்தில் பிரச்னைகள் எழுந்தன. அதன் உச்சம்தான் சங்கரின் கொலை. அந்தக் கொடூரத் தாக்குதலில் கெளசல்யாவும் காயங்களுடன் உயிர்தப்பினார். அவர், உடல்நிலையில் மட்டுமல்ல, அதுவரை அவருக்குக் கற்பிக்கப்பட்ட கருத்துகளிலிருந்து மீண்டார். பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் அழைக்கும் மேடைகளில் தவிர்க்க முடியாத நபராக கெளசல்யா இடம்பெற்றுவருகிறார். மிக நிதானமாக, தெளிவான கருத்துகளைத் தான் பங்கேற்கும் மேடைகளில் முன் வைத்துவருகிறார். அவற்றில் தனது கணவர் சங்கரைப் பற்றிய உருக்கமான பதிவுகள் இடம் பெறும் அவற்றிலிருந்து சில...

"அம்மாவின் சாயலைக் கொண்டவளென்று - எம்மைக் கண்டதும் கூறினாய்!
அதற்கு நான்,
பொதுவான வார்த்தைகளிட்டு-பொருத்தமாக இருக்காதென்றேன்.
நீ கண்ணியமாக - என்னைவிட்டு கலைந்து சென்றாய்!"

சங்கர் இறந்தபிறகான, மணநாளன்று கெளசல்யா எழுதிய கவிதையின் சில வரிகள்.

கெளசல்யா

“நானும் சங்கரும் காதலித்தோம். ஒரே கல்லூரியில் படித்தபோது காதல்வயப்பட்டோம். அது என் வீட்டாருக்குத் தெரியவந்தது. என் வீட்டார் சாதிப் பிடிப்புக் கொண்டவர்கள். நான் பள்ளியில் படிக்கிறபோது என் அப்பா ஒரு குறிப்பிட்ட பெண்ணைச் சுட்டிக்காட்டி அவளோடு நீ சேரக்கூடாது, தண்ணீர்கூட வாங்கிக் குடிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அப்போது எனக்கு அது புரிந்திருக்கவில்லை. ஏனெனில், அவள் தாழ்ந்த சாதியாம். ஆனால், எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். அந்தளவு என் பெற்றோர் சாதி வெறிபிடித்தவர்கள்.
எங்கள் காதல் தெரியவந்தபோது கடுமையாக எதிர்த்தார்கள். அதற்கெதிரான சூழ்ச்சிகளைத் தொடங்கினார்கள்.

எங்களைப் பிரிக்க எல்லா முயற்சியும் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் தாழ்ந்த சாதி என்ற பெயரில் சங்கரை அடியோடு வெறுத்தார்கள். நான் அவனை நெஞ்சில் நிறைத்து வைத்துக் காதலித்தேன். இன்றும் அவன் என்னுள் நிறைந்தே உள்ளான். இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். சாகும் வரைக்கும் காதலுக்கான நீதிக்குக் களத்தில் நிற்பேன். ஆனாலும் காதலில்கூட ஒருபோதும் சிறைப்பட்டுவிட மாட்டேன். இந்தத் தெளிவை எனக்குத் தந்ததும் தந்தை பெரியார்தான். அவரின் பெண் ஏன் அடிமையானாள் புத்தகம்தான். வேறு வழியின்றி சங்கரை இழக்க மனமின்றி வீட்டை விட்டு வெளியேறினேன். எங்களுக்கு முழுமையாகப் படிப்பை முடித்தாக வேண்டும். அதற்குள் திருமணம்குறித்து நாங்கள் சிந்திக்கவும் இல்லை. ஆனால், என் பெற்றோர் வன்மத்தோடு எம் காதலை முறிக்கத் துடித்ததால் நாங்கள் வேறுவழியின்றி மணமுடிக்கும் முடிவுக்கு வந்தோம்.

மணமுடித்த நாளிலிருந்து நானும் சங்கரும் துரத்தப்பட்டோம். நடுத்தெருவில் நானும் சங்கரும் நடந்து செல்லும்போது என்னைக் கடத்த முயற்சி செய்தார்கள். நாங்கள் இருவரும் ஓடிப்போய், காவல் நிலையத்தில் எம்மைக் காக்கும்படி நின்றோம். என் பெற்றோர்மீது புகார் அளித்தோம். அதைச் சட்டப்படி அணுகாமல் கட்டப்பஞ்சாயத்துச் செய்து அனுப்பிவிட்டார்கள். என் பெற்றோரை காவல்துறை எச்சரித்துக் கூட அனுப்பவில்லை. அது அடுத்தக் கடத்தல் முயற்சிக்கு இட்டுச் சென்றது. இந்தமுறை நான் வெற்றிகரமாகக் கடத்தப்பட்டேன். துன்புறுத்தப்பட்டேன். மந்திரிக்கும் ஒருவரிடம் கொண்டுபோய் விட்டு நாள்கணக்கில் அடைத்து வைத்தார்கள். வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டேன். எல்லாவற்றையும் தாண்டி என் சங்கரிடம் வந்தடைந்தேன். அவன் எனக்குத் தாயாகவே இருந்தான் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது. என் ஆண் தாயை நான் இழந்தேன்.”

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை மாநாட்டில்... 

கெளசல்யா

“நான் வாழும் சூழலில் நான் நானாக இருக்கவே பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. என் இயல்பைக் கொல்வதற்கு அவர்கள் அதிகாரத்தைச் செலுத்தினால் ஓங்கி மிதித்து வெளியே வந்துவிடுவேன். ஆனால், அவர்கள் பாசம் அக்கறை என்ற ஆயுதங்களைக் கொண்டு முடக்கப் பார்க்கிறார்கள். என் சங்கர் கொல்லப்பட்டதும், நான் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டதும்தான் அவர்கள் என்மீது கொண்டிருக்கிற கூடுதல் அக்கறைக்குக் காரணம். அதேநேரம், நான் சமூகத்தில் உள்ள பெண்கள்போல் அல்லாமல் தனித்து நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமும் அதே சாதிய வன்முறைதான். என்னை அன்பின் பேரால் ஒடுக்க நினைக்கும் அவர்களுக்கு, சங்கரின் ரத்தவாடை தெரியாது. அதன் கணத்தை அருகில் நின்று பார்த்தவள் நான். இறுதியாக நானும் அவனும் சேர்ந்துதான் கண்மூடினோம். நான் எழுந்தேன். அவன் எழவேயில்லை. அந்த வெற்றிடத்தை எனக்குத் தந்தது யார், என் தாய் தந்தையா, அவர்கள் கருவிகள் மட்டும்தான். அடிப்படையான காரணம் கொடிய சாதிதான். என் சங்கருக்கான இறுதி நீதி சாதி ஒழிப்புதான்.”

திராவிட விடுதலைக் கழக விழாவில்...

கெளசல்யா


“நான் சாதி வெறிபிடித்த சூழலில் பிறந்து வளர்ந்தவள். பிற்போக்கான சிந்தனைகளையும் மூடச்சடங்குகளையும் சாதிப் பண்பாடு எனும் முறையில் கட்டிக்காத்தவர்களிடையே வளர்ந்தவள்.

இன்று பெண் விடுதலைக்காகவும் சாதி ஒழிப்புக்காகவும் பங்காற்றுகிற பெண்ணாக நான் வளர்ந்துள்ளேன். அதற்கு ஒரே காரணம் நான் கொண்ட சங்கருடனான காதல்தான். எனக்காகவே சாதி ஒழிப்பு எண்ணம் தோன்றியதில்லை. சாதியால் நடைபெற்ற கொடுமைகள் எதுவும் என் மனதில் ஆழப் பதியுமளவுக்கு, சங்கருக்கு முன் நான் கண்டதோ கேட்டதோ இல்லை. ஆனால், என் சொந்த வாழ்விலேயே சாதியால் சாதி வன்மத்தால் எனக்கே அப்படியொரு கொடுமை நிகழும் எனக் கனவிலும் நினைத்ததில்லை. இன்று அதற்கெதிராக மட்டுமல்ல. ஒட்டுமொத்த சாதி ஒழிப்புக்காகவும் நிற்கிறேன். சாதி ஒழிப்புப் பயணத்தை ஒருபோதும் நிறுத்திக்கொள்ள மாட்டேன்.”

“இந்த என் எண்ணத்துக்கும் உறுதிக்கும் எது அடிப்படை. எனக்கு, சங்கர்மீது காதல் வந்தது. அவன் என்னிடம் தேடிய தாய்மையும் காதலில் அவன் கொண்ட கண்ணியமும் அவன் பக்கம் என்னை ஈர்த்தது. காதலித்தேன். இருவரும் காதலிக்கத் தொடங்கிய பிறகு நாங்கள் பேசிய ஒவ்வொன்றிலும், கைப்பற்றி நடந்த ஒவ்வொரு பொழுதிலும், தோள் சாய்ந்து கிடந்த ஒவ்வொரு வேளையிலும் ஏதேதோ பேசியிருப்போம். படிப்பு பற்றி, பிடித்த திரைப்படம் பற்றி, பாடல் பற்றி, வீட்டு உறுப்பினர்கள் பற்றி, நண்பர்கள் பற்றி என்று என்னென்னவோ பேசியிருப்போம். காதலை ஒரு முறை இருவரும் சொல்லிக் கொண்டோமே தவிர, காதல் பற்றியே சதாநேரமும் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஆனால், காதல் செய்த காலத்தின் ஒவ்வொரு நொடியிலும் அவன் காதலில், என்னையும் என் உறுதியையும் நம்பிப் பழகினான். நான் அவனோடுதான் எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்வேன் என்று முழுமையாக நம்பினான்.

என் காதல் உறுதியின் மீது அவன் கொண்ட நம்பிக்கைக்கு நான் உண்மையாக இருந்தேன். காதல் வந்தால் அதைச் சமூகத்துக்காகவோ பெற்றோருக்காகவோ மனதில் பூட்டி வைத்து மனச்சாட்சியைக் கொன்று நான் வாழ நினைக்கவில்லை. இரண்டாவது அந்தக் காதலுக்கு நேர்மையாக இருப்பதில் உறுதியோடு இருந்தேன். இதுதான் என்னைச் சாதி ஒழிப்புப் போராளியாக அல்லது சாதி மறுப்பாளியாக உங்களிடையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.”

தண்டராம்பட்டு, தம்மம் நடத்திய விழாவில்...

கெளசல்யா


“சங்கரை இழந்து நின்றவரை நான் வேறு கெளசல்யா! அதைத்தாண்டி என் இன்னொரு பிறப்பாக நான் உணர்வது, சாதி ஒழிப்புக்காரியாக நான் மீதி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று புறப்பட்டதைத்தான்.”

ஜாதிகள் இருக்கேடி பாப்பா - 3 குறும்பட வெளியீட்டு விழாவில்

“இன்றும் கணவனை இழந்த பாவப்பட்டவளாக என்னைப் பார்க்கிறார்கள். கெளசல்யாவுக்கு வாழ்க்கை தருகிறோம் என்று எவிடென்ஸ் கதிர் அவர்களிடம் சிலர் கேட்டார்களாம். சங்கர் இழப்பால் முடங்கி, அழுது, தற்கொலை முயற்சி செய்த அந்தக் கெளசல்யா கொல்லப்பட்டுவிட்டாள். இன்று சங்கரின் இறுதி நீதியான சாதி ஒழிப்புக்குரிய விடுதலைப் பெண்ணாக, மீண்டும் ஒருமுறை பிறந்திருக்கிறேன். அப்படி விடுதலைப் பெண்ணாக என்னைப் பெற்றெடுத்த தந்தை - தந்தை பெரியார்தான்.”

பெரியார் திடல் விழாவில்

“சங்கரின் நினைவைக் கொண்டு தோழர் கௌசல்யா என்ற ஒரே ஒரு அடையாளத்தோடு கௌரவக் கொலைகளுக்கு எதிராகவும், சாதி ஒழிப்புக்காகவும், பெண் விடுதலைக்காகவும், வாழ்நாள் முழுவதும் என்னளவில் பங்களிக்கவே விரும்புகிறேன்.”

(உரைகளின் பகுதிகள் கெளசல்யாவின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை)


டிரெண்டிங் @ விகடன்