வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (13/12/2017)

கடைசி தொடர்பு:08:48 (13/12/2017)

சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை!

சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காவல் ஆய்வாளர் பெரியபாண்டி


சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையின் மேல்தளத்தில் துளையிட்டு, 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை கடந்த மாதம் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த சென்னாராம், கேலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள நாதுராம், தினேஷ், சௌத்ரி ஆகியோரை தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இவர்களைப் பிடிக்க 6 பேர்கொண்ட தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றிருந்தனர். அங்கு விசாரணை மேற்கொண்டிருந்த தமிழக போலீஸார் மீது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்தச் சண்டையில், சென்னை மதுரவாயல் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், கொளத்தூர் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர், இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெரியபாண்டி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தைச் சேர்ந்தவர்.