வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (13/12/2017)

கடைசி தொடர்பு:10:00 (13/12/2017)

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 31-க்குள் ஆதார்! - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் புகைப்பட ஆதார் அடையாள அட்டை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 


இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில், 2017-18-ம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணிகளைத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விரைந்து முடித்திட வேண்டும். ஆதார் அட்டை எடுக்க மாணவர்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அழைத்துச்செல்லும்போது, பெற்றோர்களின் அனுமதி பெற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே ஆதார் அட்டை எடுத்த மாணவர்களின் தகவல்கள் மற்றும் புதிதாக ஆதார் அட்டை எடுக்கும் மாணவர்கள்குறித்த விவரங்களை, கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையில் பதிவேற்றம்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.