வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (13/12/2017)

கடைசி தொடர்பு:12:17 (13/12/2017)

ஒருவருக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் நடவடிக்கை! உயர் நீதிமன்றம் அதிரடி

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்கள் தொடர்பான விவகாரத்தில், ஒருமுறைக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிவடைந்தது. போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களது சின்னம் ஆகியவைகுறித்த அதிகாரபூர்வமான இறுதிப்பட்டியல், சமீபத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷ், ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் போலி வாக்காளர்களை நீக்க ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 45 ஆயிரம் போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கியது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இன்றும் 5,117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்று தி.மு.க வேட்பாாளர் மருதுகணேஷ் சார்பில்  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு முறையிட்டார்.

இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஒருமுறைக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.