சுகாதார சீர்கேட்டால் பறிபோன உயிர்! டெங்கு பீதியில் கிராமம்

தூத்துக்குடி மாவட்டம், கிளவிப்பட்டியைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளி செல்வமுருகன் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கிளவிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 27). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த 2 வாரத்துக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் எடுத்த சிகிச்சைக்குப் பிறகும் காய்ச்சல் நீடித்துள்ளது. எனவே, கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் டெங்கு அறிகுறி தென்பட்டது. இதனால் அவர், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, டெங்கு தடுப்புப்பிரிவு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், செல்வமுருகன் சிகிச்சை பலினின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், 5 வயதில் கரிஷ்மா என்ற மகனும் உள்ளனர்.

''கிழவிபட்டி கிராமத்தில் சாலை வசதி, வாறுகால் வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிறது. சுகாதார சீர்கேட்டைத் தடுக்கவும், அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தியும் பல முறை மனு அளித்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் ஓர் உயிர் போய்விட்டது. டெங்குக் கொசுவால் மக்கள் பீதியில் உள்ளனர்'' என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!