திருநள்ளாறில் அமைகிறது ஆன்மிகப் பூங்கா!

உலகப் பிரசித்திபெற்ற சனீஸ்வர பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறில் பிரமாண்டமான ஆன்மிகப் பூங்கா அமைய இருக்கிறது.  

மத்திய அரசின், 'சுவதேஷ் தர்ஷன்' என்னும் ஆன்மிக சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் ரூபாய் 13 கோடியே 50 லட்சம் செலவில் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  அதில் மிக முக்கியமாக திருநள்ளாறு வடக்கு உள்வட்டச் சாலை அருகில் நாயக்கர்சத்திரம் என்னுமிடத்தில் ரூபாய் 5 கோடியே 90 லட்சம் செலவில் ஆன்மிகப் பூங்கா அமைக்க இருக்கிறார்கள். இதில் ஒன்பது நவகிரகங்கள் அடங்கிய சிற்பக்கூடம், தியான மண்டபம், கலையரங்கம், அழகிய நடைபாதையுடன் கூடிய பூங்கா, பொருள்கள் பாதுகாக்கும் அறை, நவீன கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய சகல வசதிகளும் அமைக்கப்படும்.  

மேலும், அருகிலுள்ள தாமரைக்குளம் தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு வசதி செய்து தரப்படும்.  பக்தர்கள் மிகவும் புனிதமாகக் கருதும் பிரம்ம தீர்த்தம் மற்றும் மாரியம்மன் கோயில் குளம் ஆகியவை ரூபாய் 2 கோடியே 20 லட்சம் செலவில் சீரமைக்கப்படவுள்ளது.  அத்துடன் திருநள்ளாறு தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் ரூபாய் 2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்குகூடம், வரிசை வளாகம், பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளன.  இதற்கான பூமி பூஜைகள் புதுச்சேரி வேளாண்மைத் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் அந்தந்த இடங்களில் நடைபெற்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!