சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு! கலெக்டர், அதிகாரிகள்மீது 26 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு | Nutrition Staff recruitment - 26 cases filed in Chennai High Court

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (13/12/2017)

கடைசி தொடர்பு:14:45 (13/12/2017)

சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு! கலெக்டர், அதிகாரிகள்மீது 26 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தருமபுரி மாவட்டத்தில் விதிகளை மீறி சத்துணவுப் பணியாளர்கள் பணி நியமனம் வழங்கியதால், தேர்வுக் குழு  அதிகாரிகள் மற்றும் தருமபுரி மாவட்ட கலெக்டர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் 26 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த 600-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு, கடந்த ஜுன் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டவர்களில், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்ட நிர்வாகம் விதிகளைப் பின்பற்றாமல், தகுதியற்ற நபர்களுக்குப் பணி நியமனம் வழங்கியதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பரமணி, பாமக மாநில துணைபொதுசெயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

''தர்மபுரியை சேர்ந்த அமராவதி (39), சுகுணா (40), மஞ்சு (32) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விதவைப் பெண்களின் மனுவைத் தகுதி நீக்கம் செய்துள்ளனர். எனவே தர்மபுரி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது அறிய முடிகின்றது. எனவே உரிய விசாரணை நடத்தி தகுதியான நபர்களுக்குப் பணி வழங்க வேண்டும்'' என்று திமுக மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தெரிவித்திருந்தார். தவறும் பட்சத்தில், தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 26 பேர், தருமபுரி மாவட்ட கலெக்டர்  மற்றும் அதிகாரிகள்மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.