‘துணிச்சலாக முன்னேறிச் சென்றார் பெரியபாண்டி!‘ - ‘தீரன்’ படம் போல நடந்த ராஜஸ்தான் துப்பாக்கிச் சண்டை#VikatanExclusive

 இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி

ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்தார். கொள்ளையர்களைப் பிடிக்க அவர் முன்னேறியபோதுதான் இந்தத் துயரச் சம்பவம் நடந்ததாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர். 

கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையை அடுத்த கொளத்தூரில்  உள்ள   முகேஷ்குமாரின் நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. நகைக்கடையின் மேல்தளத்தில் துளையிட்டு கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம்குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கொள்ளை நடந்த இடத்திலிருந்து கிடைத்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்கள்குறித்த தகவல் கிடைத்தது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலக் கொள்ளையர்கள் என்று போலீஸாருக்குத் தெரிந்ததும் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் வடமாநிலத்துக்குச் சென்றனர். அங்கு கொள்ளையர்களின் கூட்டாளிகளான 4 பேரை தனிப்படை போலீஸார் சில வாரங்களுக்கு முன்பு பிடித்தனர். அவர்கள், தற்போது சிறையில் உள்ளனர்.

முனிசேகர்இந்தச் சூழ்நிலையில் தலைமறைவான கொள்ளைக் கும்பலைப் பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி. கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குச் சில நாள்களுக்கு முன்பு நகைக்கொள்ளையர்கள்குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் ராஜஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றனர். ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், ஜெய்த்ரான் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ராம்புர்கலான் கிராமத்தில் கொள்ளையர்கள் பதுங்கியிருக்கும் தகவல் தெரிந்தது.

உடனே அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் வியூகம் அமைத்தனர். அதன்படி இன்று அதிகாலை 2 மணியளவில் கொள்ளையர்களைச் சுற்றிவளைக்க முடிவு செய்தனர். இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி, முனிசேகர் தலைமையிலான போலீஸ் டீம் கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே சென்றனர். அப்போது, போலீஸாரை நோக்கி கொள்ளையர்கள் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதைச் சற்றும் எதிர்பாராத தனிப்படை போலீஸ் டீம் நிலைகுலைந்தது.

பாதுகாப்புக்காக அங்கிருந்த இடங்களில் பதுங்கினர் தனிப்படை போலீஸார். ஆனால், கொள்ளையர்களுக்கு அந்த இடம் குறித்த முழுவிவரம் தெரிந்ததால் குறி பார்த்து தமிழக போலீஸாரைச் சுட்டனர். பதிலடியாக போலீஸாரும் கொள்ளையர்களை நோக்கிச் சுட்டனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அந்தப்பகுதி மக்கள் திரண்டனர். பொதுமக்களும் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினர். மொழி பிரச்னை காரணமாக தமிழக போலீஸார் திணறியுள்ளனர். இதனால் தமிழக போலீஸாருக்குப் பொதுமக்களின் உதவி கிடைக்கவில்லை. 

இந்தச் சமயத்தில்தான் பெரியபாண்டி உடலில் குண்டு துளைத்தது. ரத்தவெள்ளத்தில் சரிந்த அவரைக் காப்பாற்ற தனிப்படை போலீஸார் போராடினர். அதற்குள் இன்னொரு குண்டு இன்ஸ்பெக்டர் முனிசேகர் தோளில் பாய்ந்தது. இதைப்பார்த்த தனிப்படை போலீஸ் டீம் முற்றிலும் நிலைக்குலைந்தது. இருப்பினும் பெரியபாண்டி, முனிசேகர் ஆகியோரை காப்பாற்ற முயற்சிசெய்தனர். மருத்துவமனையில் பெரியபாண்டி இறந்துவிட்டதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். முனிசேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பெரியபாண்டி குடும்பம்

இதையடுத்து தனிப்படை போலீஸார், சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்கு நடந்த சம்பவத்தை போனில் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சென்னை போலீஸ் உயரதிகாரிகள், அடுத்தகட்ட நடவடிக்கையில் களமிறங்கினார். துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர்மீது குண்டு பாய்ந்ததும் கொள்ளையர்களைப் பிடிப்பதிலிருந்து தனிப்படை டீம் பின்வாங்கியது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நகைக் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகச் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தனிப்படை போலீஸ் டீமைச் சேர்ந்த சிலரைத் தொடர்புகொண்டோம். அவர்கள் அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையை விரிவாக நம்மிடம் தெரிவித்தனர்.

“நகைக்கடை கொள்ளையர்கள் பதுங்கியிருக்கும் இடத்தைச் சுற்றி வளைத்தபோது திடீரென கொள்ளையர்கள் எங்களை நோக்கிச் சுட்டனர். நாங்களும் பதிலடி கொடுத்தோம். துப்பாக்கியால் சுட்டப்படி இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்களை நோக்கி முன்னேறினார். இதற்கிடையில், துப்பாக்கிச் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் உள்ளவர்கள் திரளத் தொடங்கினர். அவர்களுக்கு நாங்கள் போலீஸ் என்பது தெரியவில்லை. கொள்ளையர்களின் திடீர் துப்பாக்கித் தாக்குதலை ஒரு கட்டத்துக்குமேல், எங்களால் சமாளிக்க முடியவில்லை. கொள்ளையர்களுக்கு உதவியாக பொதுமக்களும் எங்களை நோக்கி கற்களை வீசத் தொடங்கினர்.

பெரியபாண்டி குடும்பம்

இதனால் அந்த இடம் போர்க்களமானது. கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி மேலும் முன்னேறினார். அப்போதுதான் கொள்ளையர்கள் சுட்ட குண்டு  அவர்மீது பாய்ந்தது. இதனால் அவர் நிலைத்தடுமாறினார். இருப்பினும் கொள்ளையர்களைப் பிடிக்க அவரும் சுடுவதற்குள் அடுத்தடுத்த தாக்குதலால் ஓட்டுமொத்த தனிப்படை டீமும் நிலைக்குலைந்தது. பெரியபாண்டியைக் காப்பாற்ற நாங்கள் போராடினோம். அந்தசமயத்தில் முனிசேகர்மீது இன்னொரு குண்டு துளைத்தது.  தனிப்படை போலீஸ்  எம்புரோஸ், குருமூர்த்தி, சுதர்சனம் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். 5 நிமிடங்களுக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கும். முனிசேகரை காப்பாற்றிவிட்டோம். ஆனால், பெரியபாண்டியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை" என்றனர் கண்ணீருடன். 

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "நகைக்கடை கொள்ளை தொடர்பாக சிலரை ஏற்கெனவே கைதுசெய்துள்ளோம். அதற்கு கொள்ளையர்கள் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன. சில நாள்களுக்கு முன்பு நகைக்கடை அதிபர் முகேஷ்குமாரின் ஈ-மெயிலுக்கு மிரட்டல் ஒன்று வந்துள்ளது. அதில், உன்னையும் காலி செய்துவிடுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் போலீஸிடம் கூறியிருக்கிறார். அதன்பிறகே வடமாநில கொள்ளையர்களைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அப்போதுதான் கொள்ளையர்கள் பதுங்கியிருக்கும் இடம்குறித்த ரகசியத் தகவல் கிடைத்தது. தற்போது நடந்திருக்கும் சம்பவத்தைப் பார்க்கும்போது தீரன் படத்தில் கொள்ளையர்கள் திட்டம்போட்டு போலீஸாரை பழிவாங்கியிருப்பதைப் போல காட்சிகள் இடம் பெறும். தற்போது, வடமாநில கொள்ளையர்களும் தமிழக தனிப்படை போலீஸாரை திட்டமிட்டே அங்கு வரவழைத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது" என்றனர்.

 இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர். அவரை இழந்தது எங்களுக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம். எங்களிடமிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுடுவார்கள் என்று கருதவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம்குறித்து விசாரணை நடந்துவருகிறது. கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வீரமரணம் அடைந்த பெரியபாண்டியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. அரசு மரியாதையுடன் அவரது இறுதி அஞ்சலி நடத்தப்படும்" என்றார். 

பெரியபாண்டியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக வடமாநிலத்தைச் சேர்ந்த தமிழகப் போலீஸ் உயரதிகாரி தலைமையில் ஒரு டீம் ராஜஸ்தானுக்கு விரைந்துள்ளது. தொடர்ந்து, சென்னை ஆவடியில் உள்ள பெரியபாண்டியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரியபாண்டி இறந்த தகவலைக் கேட்டு அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்றார். அவரிடம் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா கதறி அழுதக்காட்சி கல்நெஞ்சையும் உருக்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!