வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (13/12/2017)

கடைசி தொடர்பு:14:57 (13/12/2017)

என் கணவர் உயிரிழக்க இதுவே காரணம்! இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் மனைவி வேதனை

ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வீரமரணம் அடைந்தார். 

 பெரியபாண்டிநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளியை அடுத்த சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பெரியபாண்டி. விவசாயக் குடும்பத்திலிருந்து காவல்துறை அதிகாரியான அவர், சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். சென்னை கொளத்தூரில் நகைக்கடையின் மேற்கூரையைத் துளையிட்டு, நூதனமாக நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, தமிழகக் காவல்துறை தனிப்படை அமைத்து விசாரித்துவந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ளவர்களைத் தேடி தமிழக தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். 

ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ள ஜைத்ரான் பகுதியில், அதிகாலை சுமார் 2 மணியளவில் பெரியபாண்டி உள்ளிட்ட 7 பேர்கொண்ட போலீஸ் படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அப்போது, போலீஸாரை நோக்கி கொள்ளைக் கும்பல் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெரியபாண்டியின் மனைவி பானுரேகா, ‘கொள்ளையர்களைப் பிடிக்க கூடுதல் எண்ணிக்கையில் காவலர்களை அனுப்பியிருந்தால், எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க வெளிமாநிலங்களுக்குச் செல்லும் காவலர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும். ராஜஸ்தானில் 10 நாள்களாக கொள்ளையர்களைத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், கடந்த வாரம்தான் என் கணவர் சென்னை திரும்பினார். அதன்பின்னர், முக்கியமான ஆதாரம் ஒன்று கிடைத்திருப்பதாகக் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை அவசர அவசரமாக விமானத்தில் ராஜஸ்தான் சென்றார். அங்கிருந்தபடியே தினமும் என்னுடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். தினசரி காலையில் அவர்தான் போன்செய்து எங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுவார். நேற்றுவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்த அவர், இன்று காலை போன்செய்யவில்லை. அப்போதே, ஏதோ தவறு நிகழ்ந்திருப்பதாக எனக்குத் தோன்றியது’ என்றார். 

பெரியபாண்டியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆறுதல் கூறினார். மேலும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். பெரியபாண்டியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் விரைவில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.