`உடுமலை சங்கர் வழக்கு தீர்ப்புபோல் என் மகனைக் கொன்ற வழக்கிலும் கிடைக்கும்' - 2 வருடங்களாகக் காத்திருக்கும் கோகுல்ராஜ் தாயார்

உடுமலை சங்கர் கெளசல்யா வழக்கைப்போல தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிய வழக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு. கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி கோகுல்ராஜ், தன்னோடு கல்லூரியில் பயின்ற ஸ்வாதியும் திருச்செங்கோடு மலைக் கோயிலில் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்போது தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருவரையும் மிரட்டுகிறார். 23-ம் தேதி காலை கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்தார். அதையடுத்து யுவராஜ் தலைமறைவாக இருந்து காவலர்களுக்கு டிமிக்கி விட்டு இறுதியில் சரணடைந்தார். தற்போது இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு வந்த இந்தச் சூழலில் கோகுல்ராஜின் அம்மா சித்ராவிடம் பேசினோம். ''உடுமலையில் சங்கர் ஆணவப் படுகொலை வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படும் என்று கூறி இருந்ததை அடுத்து நானும் நேற்று ஆவலோடு டி.வி முன்பு அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நீதிபதி 6 பேருக்குத் தூக்கு, 3 பேருக்கு விடுதலை, இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை வழங்கியதைப் பார்த்து கண்ணீர்விட்டேன். நான் கணவனை இழந்து இரண்டு மகன்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்தேன். என் சின்ன பையன் கோகுல்ராஜ் தன்னோடு படித்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததற்காக வெளிநாட்டு தீவிரவாதியைப்போல யுவராஜூம் அவரின் ஆட்களும் என் மகனின் கழுத்தை அறுத்து ரயில் தண்டவாளத்தில் தூக்கிப் போட்டுட்டாங்க. சண்டால பாவிகள். இதுபோன்ற சாதி வெறி பிடித்தவர்களுக்கு அச்சத்தைத் தரக்கூடிய தீர்ப்பாக இருப்பதால் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்.

உடுமலை சங்கர் - கெளசல்யா தீர்ப்பு எனக்கு ரொம்ப நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு. கோகுல்ராஜ் கொலை வழக்குக்கும் நீதி கிடைக்கும் என ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன். கோகுல்ராஜை கொன்ற கயவர்களுக்கும் இதே போன்ற தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. எங்க வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் முதற்கட்ட விசாரணையே தொடங்கவில்லை. உடுமலை சங்கர் வழக்கைப்போல் என் மகன் வழக்கையும் சீக்கிரத்தில் விசாரித்து குற்றவாளிகளுக்கு இதுபோன்ற மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் மனித உயிரின் மதிப்பு இந்தச் சாதி வெறியர்களுக்குத் தெரிய வரும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!