காதலரைக் கணவராக்கிய பிளாஸ்டிக் சர்ஜரி! - காட்டிக் கொடுத்த மட்டன் சூப் | Hyderabad woman who killed her husband caught by Mutton soup

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (13/12/2017)

கடைசி தொடர்பு:14:20 (14/12/2017)

காதலரைக் கணவராக்கிய பிளாஸ்டிக் சர்ஜரி! - காட்டிக் கொடுத்த மட்டன் சூப்

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னுல் நகரைச் சேர்ந்த நர்ஸ் ஸ்வாதி. இவரின் கணவர் சுதாகர் ரெட்டி. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு முன்பே, ஸ்வாதி ராஜேஷ் என்பவரைக் காதலித்துள்ளார். நிர்பந்தம் காரணமாகச் சுதாகரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் ஸ்வாதியால் காதலரை மறக்க முடியவில்லை. எனவே, கணவரைக் கொன்றுவிட்டு, காதலருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, கணவர்போல மாற்றத்திட்டமிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 27-ம் தேதி இருவரும் சேர்ந்து சுதாகர் ரெட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்து உடலை காட்டுப் பகுதியில் புதைத்துள்ளனர். 

பிளாஸ்டிச் சர்ஜரி வழியாக கணவரை மாற்றத் திட்டம்

பின்னர், வீட்டில் இருந்தவர்களிடம் தன் கணவர் முகத்தில் யாரோ ஆசிட் வீசி விட்டதாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று ஸ்வாதி கூறியிருக்கிறார். முகம் பாதி எரிந்துபோன நிலையில், ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். மருத்துவமனையில் ராஜேஷுக்கு மட்டன் சூப் கொடுத்துள்ளனர். ராஜேஷ், 'நான் வெஜிட்டேரியன், மட்டன் சூப் எல்லாம் அருந்த மாட்டேன் ' என்று மறுத்துள்ளார். ஆனால், சுதாகர் ரெட்டியோ அசைவம் சாப்பிடுபவர். 

இதனால், உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போலீஸில் புகார் தெரிவித்தனர். அதிரடி விசாரணையில் ராஜேஷும் ஸ்வாதியும் சேர்ந்து சுதாகர் ரெட்டியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி கைது செய்யப்பட்டார். ராஜேஷ் குணமானதும் கைது செய்யப்படுவார் எனக் கூறியுள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ்

2014-ம் ஆண்டு வெளியான 'யாவடு ' என்ற தெலுங்குப் படத்தில் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு, காதலருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவருடன் சேர்ந்து வாழத் திட்டமிட்டிருந்தாகப் போலீஸ் விசாரணையில் ஸ்வாதி கூறியிருக்கிறார். 'யாவடு' படத்தில் தாய் ஒருவர், காயமடைந்த ஒருவருக்கு தன் மகனைப்போல பிளாஸ்டிச் சர்ஜரி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க