வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (13/12/2017)

கடைசி தொடர்பு:19:34 (13/12/2017)

குமரி மீனவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்! களமிறங்கினர் மீனவர்கள் படை

குமரி மாவட்டத்துக்கு முதல்வர் நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து மீனவ கிராமங்களில் நடைபெற்று வந்த தொடர் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

போராட்டம்

நவம்பர் 30-ம் தேதி குமரி மாவட்டத்தை உலுக்கிய ஒகி புயலின் பாதிப்புகளிலிருந்து மக்கள் தேறி வருகிறார்கள். மீனவ மக்கள் பெரும் சேதத்தைச் சந்தித்த நிலையில், ஏராளமான மீனவர்கள் கடலிலிருந்து திரும்பி வராததால் அவர்களின் நிலைமை குறித்து உறவினர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் கடலில் தத்தளிக்கும் தங்களின் உறவினர்களை மீட்கக் கோரியும் குமரி மாவட்டத்தைத் தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும் நோரோடி முதல் தூத்தூர் வரை உள்ள 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தங்களைச் சந்திக்க முதல்வர் வர வேண்டும் என்றும் அதுவரையிலும் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து டிசம்பர் 12-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்தூர் கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்தித்துப் பேசினார். செயின்ட் ஜூடு கல்லூரியில் நடந்த அந்தச் சந்திப்பின்போது, மீனவர்களுக்கு உதவ தமிழக அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

அத்துடன், புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாயும் கல்வித் தகுதிக்கு ஏற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்தார். அத்துடன், சேதமடைந்த படகு, வலைகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் இடிந்த வீடுகளுக்குப் பதிலாகச் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மீனவர்களின் நலனுக்காகத் தகவல் தொடர்புக்காகச் சாதனங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

ப்ளக்ஸ் போர்டு

இதையடுத்து, தூத்தூரில் மீனவ சமுதாயப் பிரதிநிதிகள், பங்குத் தந்தையர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சிலர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மீனவர்களையும் சந்திக்காமல் குறிப்பிட்ட சிலரை மட்டுமே சந்தித்து விட்டுச் சென்றதைக் குறையாகத் தெரிவித்தனர். குறிப்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தங்களை வந்து சந்திக்கவில்லை எனவும் குறிப்பிட்டனர். மேலும் சிலர் பேசுகையில், கடலுக்குள் சிக்கியிருக்கும் கடைசி மீனவன் மீட்கப்படும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினர், மற்றொரு தரப்பினர், முதல்வர் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பதால் போராட்டத்தை கைவிடலாம் என ஆலோசனை தெரிவித்தனர். 

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன், கடலுக்குள் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கும் வகையில் 8 விசைப்படகுகளில் 48 மீனவர்கள் கடலுக்குள் சென்று தேடும் பணியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. காணாமல்போன மீனவர்களை அந்த விசைப்படகுகளில் சென்று பல்வேறு திசைகளிலும் தேடத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதனால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.