18 ஆண்டு சிறை வாழ்க்கை! நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு குற்றவாளியை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவு

1986-ம் ஆண்டு நிகழ்ந்த, நடிகை ராணி பத்மினி கொலை வழக்கில் 18 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த குற்றவாளியை உடனடியாக விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணி பத்மினி

1980-களில் மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை ராணி பத்மினி. தமிழிலும் பட்டம் பதவி, கனவுகள் கற்பனைகள், நிரபராதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த இவர், தன் தாய் இந்திர குமாரியுடன் சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார்.

1986-ம் ஆண்டு நடிகை ராணி பத்மினி தனது இல்லத்தில் கொலை செய்யப்பட்டார். வீட்டிலிருந்த ராணி பத்மினியின் டிரைவர் ஜெபராஜ், காவலாளி லட்சிமி நரசிம்மன், சமையல்காரர் கணேசன் ஆகிய மூன்று பேரும் இணைந்து முதலில் தாய் இந்திரகுமாரியைத் தாக்கி உள்ளனர். அப்போது தடுக்க வந்த ராணி பத்மினியுடன் அவரின் தாயையும் கொலை செய்தனர்.

இந்தக் கொலை வழக்கில் 1987-ம் ஆண்டு செங்கல்பட்டு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. அதன்பின், 1990-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் குற்றவாளிகள் மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. பின்னர், சிறையில் இருந்த ஜெபராஜ் மரணமடைந்தார். கணேசன் தப்பியோடிவிட்டார். சிறையில் 18 ஆண்டுகளாக இருந்து வந்த குற்றவாளி லட்சுமி நரசிம்மனை தற்போது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜிவ்சக்தர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

இதுகுறித்து, லட்சுமி நாராயணின் உறவினர்கள் கூறுகையில், “வழக்கு விசாரணையில் தூக்குத்தண்டனைக் கைதியை விடுதலை செய்யக் கூடாது என்ற வாதம் முன் வைக்கப்பட்டபோது, தூக்குத்தண்டனைக் கைதியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டாலும், அவரையும் ஆயுள் தண்டனைக் கைதியாகவே கையாள வேண்டும் என நீதிபதி கூறினார்”. இதையடுத்து நீதிபதி ராஜிவ்சக்தர் கைதி லட்சுமி நரசிம்மனை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!