விவசாயம் செழிக்க பூக்களை ஏந்தி பூத்தட்டு திருவிழா நடத்திய மக்கள்!

திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவில் வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் பூத்தட்டு திருவிழா நடைபெறும். நேற்று மாலை நடைபெற்ற இந்தத் திருவிழாவில் கீழவளவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான வடக்கு வலையப்பட்டி, வாச்சாம்பட்டி, சருகுவலையப்பட்டி, கீழையூர், கம்பர்மலைப்பட்டி உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.

இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாகக் காலை கோ பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிராம மக்கள் 108 பசுக்களைப் பூஜித்து வழிபட்டனர். மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான பூத்தட்டு நிகழ்வு மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கைகளிலும் தலையிலும் பூக்கள் அடங்கிய தட்டுகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தின் இறுதியில் கோயிலை அடைந்து அம்மன் முன்பாகத் தாங்கள் ஏந்தி வந்த பூக்களைத் தூவி அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவின் வீரகாளியம்மன் மாட்டுவண்டியில் வீதியுலா வந்து கிராம மக்களுக்கு அருள்பாலித்தார். கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தலைமுறைகளாகத் தவறாது வருடந்தோரும் இந்தப் பூத்தட்டு திருவிழா நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!