வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (13/12/2017)

கடைசி தொடர்பு:11:01 (14/12/2017)

இடைத்தரகர்களின் பிடியில் பாலிடெக்னிக் பணியிடங்கள்... சீட்டுக்கு ரூ. 30 லட்சம் வசூல்!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. அந்தத் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விரிவுரையாளர் பணிக்கான தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். இதில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட நிலைக்கு அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2,200 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதில், 220 பேர், மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

அரசு நடத்தும் தேர்வில் எப்படி முறைகேடு செய்ய முடிந்தது, எப்படி போலியாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்க முடிந்தது, இதன் பின்னணியில் இருப்பது யார் என விசாரித்தோம். 

பாலிடெக்னிக்

தேர்வு எழுதியவர்கள் சரியான விடைகளை மட்டும் குறியிடுவார்கள். இந்தக் குறியிடு (Optical mark recognition) மின்னணு முறையில் திருத்தப்பட்டு, மதிப்பெண் வெளியிடப்படும். இதில் மற்றவர்களின் தலையீடு இருக்காது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பின்னர், அதிக மதிப்பெண் பெற்றவர்களைச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பது வழக்கம். இவர்களுக்கான கடிதத்தை ஆசிரியர் தேர்வாணையத்தில் இருப்பவர்கள் தயார் செய்வர். இதைத் தெரிந்துகொண்டு, தேர்வு எழுதியவர்களில் ஒரு சிலர், தங்களுக்குச் சாதகமான மதிப்பெண் பட்டியலைத் தயார் செய்வதற்காக புரோக்கர்களை அணுகியுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றால், பணம் தருவதாக உறுதியளித்துள்ளனர். அந்தவகையில், புரோக்கர்களின் உதவியுடன் 220 பேர், தங்கள் மதிப்பெண்களைக் கூட்டி சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்துள்ளனர்.

இந்தச் சூழலில், உண்மையிலேயே தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பலருக்கும் அழைப்பு வரவில்லை. இவர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்ணையும், சான்றிதழ் சரிபார்ப்பின்போது அழைக்கப்பட்டவர்களுக்கான மதிப்பெண்ணையும் ஒப்பீட்டுப் பார்த்தனர். அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் புகார் தெரிவித்தனர். உடனடியாக தேர்வாணையம் விசாரணை நடத்தியது. இதில், முறைகேடு நடந்தது உறுதியானது தெரியவந்ததை அடுத்து தேர்வு முடிவை ரத்து செய்திருக்கிறது. 'தேர்வு எழுதிய 1.33 லட்சம் பேரின் விடைத்தாள்களும் இணையத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவு குறித்து 18-ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்' என்று ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

பாலிடெக்னிக்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வாரியத்தில் விசாரித்தபோது 'போலியாக மதிப்பெண்களைக் காட்டி 220 பேர் சான்றிதழ் சரிபார்க்க வந்திருக்கின்றனர். இதனால், ஏற்கெனவே வெளியிட்டுள்ள தேர்வு முடிவை ரத்து செய்திருக்கிறோம். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களது நோக்கம். விரைவில் புதிதாக தேர்வு முடிவு வெளியிடப்படும்' என்று தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்டவர்களிடம் பேசினோம். "ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட மதிப்பெண் விவரங்களையும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதிக மதிப்பெண் பெற்ற எங்களை அழைக்காமல் போலியாக மதிப்பெண்ணை உயர்த்தியவர்களைச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்துள்ளனர்.  எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்பட்ட 180 பேரில்,  70 பேர் போலி மதிப்பெண் பெற்றவர்கள். மெக்கானிக்கல் பிரிவில் 438 பேரில் 50 பேரும், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் பிரிவில் 30 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் பாடத்தில் 40 பேரும் போலி மதிப்பெண் பெற்றிருக்கின்றனர்" என்றனர். 

"பயிற்சி மையங்கள் இந்த முறைகேட்டின் மூளையாகச் செயல்பட்டிருக்கின்றன. இவர்களின் வழியாகத் தரகர்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. 50 மதிப்பெண் பெற்றவர்கள் தங்களுடைய மதிப்பெண்ணை 150 என மாற்றியுள்ளனர். 52 மதிப்பெண் எடுத்தவர் 136 மதிப்பெண் எடுத்ததாக முறைகேடு செய்திருக்கிறார். இதன்மூலம், சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகுதிநிலையை அடைந்திருக்கின்றனர். இந்த மதிப்பெண் முறைகேட்டில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்களே அதிகம். இவர்களிடமிருந்து வேலை வாங்கித் தருவதாக 50 கோடி ரூபாய் வரை இடைத்தரகர்கள் பெற்றிருக்கிறார்கள்" என்று அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர். 

இந்த மதிப்பெண் முறைகேடு சார்ந்து காவல் துறையில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆசிரியர் தேர்வாணையமும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


டிரெண்டிங் @ விகடன்