வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (13/12/2017)

கடைசி தொடர்பு:20:45 (13/12/2017)

களை இழந்த குமரி மாவட்ட மீனவ கிராமங்கள்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து!

ஒகி புயல் காரணமாகக் குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்காமல் இருப்பதால் மீனவக் கிராமங்கள் களையிழந்து போயிருக்கின்றன. 

களை இழந்த கிறிஸ்துமஸ்

குமரி மாவட்டத்தைத் தாக்கிய ஒகி புயலின் பாதிப்பிலிருந்து மெள்ள மீண்டு வருகிறது, குமரி மாவட்டம். இருப்பினும் இன்னும் புயலின் பாதிப்பின் சோகம் முழுமையாக மறையவில்லை. குறிப்பாக, மீனவக் கிராமங்களில் கோரத்தாண்டவம் ஆடிய புயல் விட்டுச்சென்ற பாதிப்பின் அடையாளம் இன்னும் அழியாமல் இருக்கிறது. ஆழ்கடல் மீன்பிடித் தொழில் காரணமாகச் சின்னத்துறை, தூத்தூர், நீரோடி, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கடற்கரைக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம். 

அத்துடன், உள்ளூரில் உள்ள விசைப்படகுகள் மூலமாகவும் ஏராளமானோர் கடலுக்குள் 45 நாள்கள் வரை தங்கியிருந்து மீன் பிடிப்பார்கள். ஆனால், டிசம்பர் மாதம் அவர்கள் தங்களுடைய வேலைகளை முடித்துவிட்டு கரைக்குத் திரும்புவார்கள். குறிப்பாக, கிறிஸ்துமஸ் பண்டிக்கையைக் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காகக் கடலிலிருந்து வருவார்கள். இந்த வருடமும் அதேபோல ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்குச் சென்றவர்கள் தற்போது திரும்பி வர வேண்டும். ஆனால், ஒகி புயலில் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பல்வேறு பகுதிகளுக்கும் அடித்துச் செல்லப்பட்டதால் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை. 

புயலில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. அதன் காரணமாக மீனவ மக்களின் வீடுகளில் கிறிஸ்துமஸ் உற்சாகம் கொஞ்சமும் இருக்கவில்லை. பொதுவாக டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் குடில்கள் அமைப்பது, ஸ்டார்களை வீடுகளில் தொடங்க விடுவது, மின் விளக்குகளால் அலங்கரிப்பது போன்ற பணிகள் தொடங்கிவிடும். ஆனால், இந்த வருடம் மீனவக் கிராமங்கள் சோகத்தில் மூழ்கி இருக்கின்றன. தேவாலயங்களில்கூட பெரிய அளவில் அலங்காரங்கள் எதுவும் இல்லை. அதனால் குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான எதிர்பார்ப்புகள் இழந்தே காணப்படுகிறது.