வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (13/12/2017)

கடைசி தொடர்பு:22:40 (13/12/2017)

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்கள்: காவல் நிலையத்தில் குவியும் வழக்குகள்!

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பது தெரியாத நிலையில், காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் குறித்து உறவினர்கள் புகார் கொடுத்து வருகிறார்கள். அதன் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது

காவல் நிலையத்தில் வழக்கு

கடந்த 30-ம் தேதி குமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. விவசாய நிலங்கள் சேதமடைந்ததுடன், மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. புயல் பாதிப்புகளிலிருந்து குமரி மாவட்டத்தை மீட்கும் வகையில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதுவரை 80 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. 

இதனிடையே ஒகி புயலால் 1013 மீனவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் உறவினர்கள் கவலையில் உள்ளனர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகக் கடலுக்குள் சென்றவர்களுக்குத் தகவல் தெரிவிக்க முடியாததால் புயலில் சிக்கி அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். பல மீனவர்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் கரை ஒதுங்கிய நிலையில், சில மீனவர்கள் தங்களின் கண் முன்பாகவே கடலுக்குள் மூழ்கி இறந்ததாக தப்பி வந்த மீனவர்கள் திகிலுடன் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், கடலில் காணாமல் போன மீனவர்கள் 7 வருடங்களுக்குப் பின்னரே இறந்ததாக அறிவிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கான நிவாரணத் தொகையைப் பெறுவதில் உறவினர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அசாதாரணமான இந்தச் சூழலில் உயிரிழந்த மீனவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்பினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, முதல் கட்டமாகக் கடலுக்குள் காணாமல் போன மீனவர்கள் குறித்து அருகிலுள்ள காவல்நிலையங்களில் புகார் தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. மாவட்ட நிர்வாகம் எடுத்த கணக்கெடுப்பின்படி, 433 மீனவர்கள் கடலிலிருந்து திரும்பவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஏராளமானோர் அந்தப் பட்டியலில் விடுபட்டதாக அதிருப்தி எழுந்ததால், அவர்கள் குறித்து காவல்நிலையங்களில் ’மேன் மிஸ்ஸிங்’ வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடலோர கிராமங்களான நீரோடி, தூத்தூர், தேங்காய் பட்டணம், இரவி புத்தந்துறை, முட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்கள், கடலுக்குச் சென்று காணாமல் போன தங்களின் உறவினர்கள் தொடர்பாக மேன் மிஸ்ஸிங் புகார் அளித்து வருகிறார்கள். இது குறித்து கடலோரக் காவல்படை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ’’நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினர் குமரி மீனவ கிராமங்களில் முகாமிட்டு காணாமல் போனவர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறார்கள். 

அத்துடன், நேரடியாகக் கடலோரக் காவல்படையினரிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குளச்சல் காவல்நிலையத்தில் இதுவரை 412 பேர் தங்களின் உறவினர்களைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார்கள். அது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்கிறோம். இதுவரை 52 மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அதன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். எஞ்சிய மனுக்கள் தொடர்பாகவும் அடுத்தடுத்து விசாரணை நடத்துவோம்’’ என்கிறார்கள். கடலோர கிராமங்களில் குவியும் புகார்களால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.