வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (13/12/2017)

கடைசி தொடர்பு:07:21 (14/12/2017)

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: சிறையிலிருக்கும் பாட்ஷாவை விடுவிக்க உத்தரவு

கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய அல் உம்மா நிறுவனர் பாட்ஷாவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஷா

1997-ம் ஆண்டு, மோட்டர் சைக்கிளில் மூன்று பேராக அமர்ந்து சென்ற அல் உம்மா இளைஞர்களை, போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் தடுத்து நிறுத்தினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னை சற்று கடுமையானது. இந்த நேரத்தில், நவம்பர் 29-ம் தேதி போக்குவரத்துத் துறை காவலர் செல்வராஜை சிலர் வெட்டிக் கொன்றனர். இந்தப் படுகொலைக்குக் காரணம் அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பது தெரியவந்து, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களைப் பின்னணியாக வைத்து கோவையில், இந்து- முஸ்லிம் கலவரம் வெடித்தது.

இதையடுத்து, 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி கோவையில் வெடிக்கத் தொடங்கிய குண்டுகள் 17-ம் தேதி வரை மூலைமுடுக்கில் எல்லாம் வெடித்தன. 50-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பல நூறு கோடி ரூபாய் சொத்துகள் நாசமடைந்தன. இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி, அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா உள்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் போனது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கோவை சிறப்பு நீதிமன்றம், 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய அல் உம்மா நிறுவனர் பாட்ஷாவை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பாட்ஷாவின் மகள் முபீனா தாக்கல் செய்த மனுவில், ' 76 வயதைக் கடந்து, 22 ஆண்டுகள் சிறையில் உள்ள பாட்ஷாவை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார். இதை விசாரித்த நீதிபதி, 'தமிழக அரசு ஆறு வாரத்தில் பரிசீலித்து அவரை விடுதலை செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.