ஒகி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிறருக்கு நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது!

ஒகி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிறருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

எடப்பாடி பழனிசாமி


சில நாள்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வீசிய ஒகி புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் வீசுவதற்கு முன்னர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலை உள்ளது. எனவே, மீனவர்களைத் தேடும் பணியை இன்னும் துரிதமாகச் செய்யச் சொல்லி குமரியில் பல இடங்களில் போராட்டம் நடந்துவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று தமிழ் நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குமரிக்குச் சென்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து இன்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `நேற்று கன்னியாகுமரிக்குச் சென்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியுதவியை உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று என்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒகி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவியுடன் கூடுதலாக ஆறு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!