பாட்டியுடன் போஸ் கொடுத்தால் எம்.ஜி.ஆர் ஆகிவிடுவாரா எடப்பாடி பழனிசாமி?!

கி புயல் ஓய்ந்துவிட்டாலும், அதன் பாதிப்புகள் இன்னும் அப்படியேத் தொடர்கின்றன. தமிழகத்தில், புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருப்பது கன்னியாகுமரி மாவட்டம். புயல் சம்பவத்துக்குப் பிறகு உருக்குலைந்துபோன நிலையில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில்  நடந்த தொடர் போராட்டங்களால் குமரிக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி. கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பி.ஜே.பி தலைவர் தமிழிசை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் என்று அனைத்துத் தலைவர்களும் ஒகி புயல் கோரத்தாண்டவத்தின் அழிவுகளை நேரில் பார்த்துவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்ற பிறகு கடைசியாக வந்து போனார்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 10 நாள்களுக்கும் மேலாக நடந்தப் போராட்டத்துக்குப் பிறகு, 'மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசைப்போல நிவாரணம் வழங்க வேண்டும்' என்று கடந்த 12 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.

எடப்பாடி  

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், ''ஒகி புயலின்போது மரணமடைந்த அனைவரின் குடும்பத்துக்கும், நிவாரணப் பணிகளின்போது இறந்துபோனவர்களின் குடும்பத்துக்கும் கேரள மாநிலத்தில் வழங்கியது போல தலா ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். படகுகளுக்கும் மீன்பிடி உபகரணங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் நெல், வாழை, ரப்பர் மற்றும் தோட்டப் பயிர்கள் பெருமளவில் அழிந்துபோயின. அனைத்து நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகளை முறையாகப் பதிவு செய்து தொழிலுக்கு அனுப்ப வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். வாய்வழி குத்தகைதாரர்கள், மலைவாழ் மக்கள் என்று பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விரைவாக உரிய நிவாரண உதவி கொடுக்க வேண்டும்'' என்றார்.

டிசம்பர் 12 ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை கல்படி பகுதியில் புயலில் சாய்ந்த வாழை மரங்களை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  பின்னர் தூத்தூர் சென்றார். அங்கு மீனவக் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்தூர் கல்லூரியில் பங்குதந்தையர் மற்றும் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் கருத்துகளைக் கேட்டறிந்தார். 

பின்னர் முதல்வர் பேசும்போது, ''கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு கரை சேரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இங்கே புயல் வரும் பொழுது மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே, இங்கே ஹெலிபேட் அமைத்தால் புயல் காலங்களில் மீனவர்களை உடனடியாகக் காப்பாற்ற உதவும் என்று  ஹெலிபேட் அமைக்க மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இறந்த மீனவர்களுக்கு  அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்டு இறந்த மீனவர்  குடும்பத்துக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்றவாறு தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மீனவர்களைத் தேடுகின்ற பணி முடுக்கிவிடப்பட்டு, இறுதிக்கட்டம் வரையிலும் தொடரும். காணாமல் போன மீனவர்களுக்கும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிவாரணம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

edappadi

குமரி மாவட்டத்தில் கல்படி ஏலா பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட வாழை சாகுபடி பகுதிகளையும் பார்வையிட்டார் முதல்வர். அப்போது, 'பாதிக்கப்பட்ட மீனவர் பகுதிகளைச் சந்திப்பதற்கு முக்கியத்துவம் தராமல் வாழை, செடி கொடிகளை முதல்வர் பார்வையிடுகிறாரே... என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு மக்கள் சந்திப்புகளுக்குத் தயாரான முதல்வர், தூத்தூர் கிராமத்தில், புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த, வயதான மூதாட்டி ஒருவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.  ஆறுதல் கூறிய படத்தை பத்திரிகைகளில் வருமாறு பார்த்துக்கொண்டனர் செய்தி விளம்பரத் துறையினர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுகூட இதுபோன்ற சென்டிமென்ட் படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டமாட்டார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோதுதான் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். அதேபோன்று மக்கள் மத்தியில், தன்னுடைய இமேஜ் உயரவேண்டு்ம் என்பதற்காக எடப்பாடி இந்தப் பாலிசியைக் கையாண்டுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கடந்த காலங்களில், இவ்வாறு இயற்கை பேரிடர் சம்பவங்களின்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா பார்வையிடச் செல்லும்முன், மூத்த அமைச்சர்களை அனுப்பி பார்வையிட வைப்பார். அவர்களிடம் விவரம் கேட்டுவிட்டு, இறுதியாக ஜெயலலிதாவும் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருவார். அதுபோல், இப்போதும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்கூட்டியே கன்னியாகுமரிக்கு அனுப்பிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடைசி ஆளாகப் பார்வையிடச் சென்றுள்ளார். முதல்வரின் பயணம் பத்து நாள் போராட்டத்துக்கு முடிவு கட்டுவதுபோல் இருக்கிறது. தற்காலிகமாக இப்போது மீனவர் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளார்கள். அரசாங்கத்தின் நிவாரண உதவி நடவடிக்கைகளைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கன்னியாகுமரி மாவட்ட சமூக நல அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. 

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் அகஸ்டஸ் என்பவர் கூறுகையில்,”ஆர்.கே.நகர் தேர்தல் பிராச்சாரத்தைத் தொடக்கிவைத்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் எங்களைப் பார்த்துவிட்டு எங்களின் துயரங்களில் பங்கெடுத்துவிட்டுச் சென்றபிறகு மெதுவாகக் கடைசி ஆளாக, அதுவும் மீனவ மக்களின் இடைவிடாத போராட்டத்திற்குப் பிறகுதான் முதல்வர் எங்களைப் பார்க்கவந்தார். இந்த பயணமும் முழுமையாக இல்லை. ஏதோ பெயரளவிற்குதான் அவரது பயணம் இருந்தது. ஆனால் எங்கள் மக்களின் தொடர் போராட்டத்தால்தான் கேரளாவைப் போல நிவாரண உதவியை முதல்வர் அறிவித்துள்ளார். கடுமையான பாதிப்பு தமிழக மீனவர்களுக்குதான். இந்த உதவி அறிவிப்பில் முன் உதாரணமாக இருந்திருக்க வேண்டிய தமிழக அரசு வேதனையில் இருந்த எங்களை வீதியில் இறங்கி போராட வைத்துவிட்டது இன்னும் சோகத்திலும் சோகம், என்றார்.  

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் நேற்று நடைபெற்ற மக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் வெறும் இருபது மீனவர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பகுதியில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்.ஜி.ஆர் போல காட்டிக் கொள்வதில் இருந்த அக்கறை, எம்.ஜி.ஆர் போலக் குறைகேட்பதிலும் இருந்திருக்கலாமே சி.எம்?

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!