திருவாடானை அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை பறிமுதல்!

திருவாடானை அருகே ரூ.3 கோடி மதிப்புடைய ஐம்பொன் விநாயகர் சிலையை திருவாடானை போலீஸார் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றினர். இது தொடர்பாக நால்வரை கைது செய்துள்ள போலீஸார் சிலையைக் கடத்தப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

திருவாடானை அருகே பிடிபட்ட ஐம்பொன் சிலை


தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் இருந்த புராதன சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக திருடப்பட்டு வந்தன. பல கோடி மதிப்பிலான இந்த பழங்கால சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பல்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் தொடர்ச்சியாக கைது செய்து வந்த நிலையில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அத்துறையில் இருந்து மாற்றப்பட்டார். இதனை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து உயர் நீதிமன்றம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி யாக பொன்மாணிக்கவேல் தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட சிலைகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்த போலீஸார்


 இந்நிலையில் திருவாடானை அருகே ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்தி மதுரை வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்ய இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல்  உத்தரவின்  பேரில் திருவாடானை துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து  சோதனையில் ஈடுபட்டனர். 

 அப்போது திருவாடானை தொண்டி ரோட்டில் அச்சங்குடி அருகே நின்ற நானோ காரை சோதிக்க சென்ற போது இருவர் தப்பி ஓடினர். தப்பி ஒடியவர்களை விரட்டி பிடித்து விசாரித்த போது வாகனத்தில்  ஒன்றே முக்காடி அடி உயரம் கொண்ட  ஐம்பொன் விநாயகர் சிலையை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிலையை கைப்பற்றிய போலீஸார் நாகப்பட்டினம் தங்கபாண்டியன், வெள்ளையபுரத்தை சேர்ந்த செய்யது அப்தாகிர் , ரிஸ்வான், அம்ஜத்கான் ஆகியோரை கைது செய்து ஐம்பொன் சிலை எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள் .  பிடிபட்ட சிலையின் மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!