ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கணிப்பு முடிவு?!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டி.டி.வி. தினகரன் அதிகபட்சமாக 35.5 விழுக்காடு வாக்குகள் பெற்று, முன்னிலை பெறுவார் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியிருப்பது, ஆளும் அ.தி.மு.க. தரப்பையும் தி.மு.க-வையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில், ஆர்.கே.நகரில் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் வெற்றிபெறுவார் என்றும், அவருக்கு அடுத்தபடியாக டி.டி.வி. தினகரன் பெருவாரியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், தி.மு.க-வினர் உற்சாகத்துடன் ஆர்.கே.நகர் தொகுதியில் களப்பணியாற்றிவந்தனர்.

இந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மக்கள் ஆய்வகத்தினர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள், முந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிராக அமைந்துள்ளது. 

அதன்படி, டி.டி.வி. தினகரன் 35.5 விழுக்காடு வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றிபெறுவார் என்றும், அவருக்கு அடுத்த இடத்தை தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் 28.5 விழுக்காடு வாக்குகள் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனுக்கு 21.3 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 4.6 விழுக்காடு வாக்குகளையும், பி.ஜே.பி. வேட்பாளர் கரு. நாகராஜன் 1.5 விழுக்காடு வாக்குகளையும் பெறுவார்கள் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலால், ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் மிகப்பெரும் அதிர்ச்சியடைந்துள்ளன. தினகரன் வெற்றிபெற்று சட்டசபைக்கு வந்தால், ஆளும் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமையும் என்று ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அதேநேரத்தில் அ.தி.மு.க-வில் உள்ள குழப்பங்களுக்கு மத்தியில் தங்களால் வெற்றிபெற முடியாவிட்டால், இனி தி.மு.க.-வின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். எப்படி இருப்பினும், அடுத்த சில நாள்களில் ஆர்.கே.நகர் என்னவாகப்போகிறது என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதியில் செய்தியாளர்கள்மீது, சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!