ரூ.1,600 கோடி டெண்டரில் முறைகேடு! திருச்சி பெல் நிறுவனத்தைச் சுற்றும் சர்ச்சை

திருச்சி பெல் நிறுவனத்தில்,சுமார் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு சமீபத்தில் டெண்டர் விடப்பட்டிருந்தது. இது, தகுதியில்லாத நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்காகத் தொடரப்பட்ட வழக்கில், அந்த டெண்டருக்கு தடைவித்துள்ளது உயர் நீதிமன்றம்.

பெல்பெல் நிறுவனம் சார்பு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவரான அசோக் சுந்தரேசனிடம் பேசினோம், “திருச்சி பெல் நிறுவனத்தின் 2.75 லட்சம் டன்னுக்கான பணிகளுக்கு, கடந்த 6-ம் தேதி இ.டெண்டர் அறிவிக்கப்பட்டது. சுமார் 1600 கோடி மதிப்பிலான இந்த ஏலத்தில், 1300 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு குறைந்த விலைப்புள்ளிகளுக்கு நாக்பூரைச் சேர்ந்த சீம் இன்டஸ்ட்ரீஸ் எனும் பெரு நிறுவனம், மொத்தமுள்ள 38-ல், 24 பணிகளுக்கு அனுமதி கோரியது.

இதனால், திருச்சியில் பெல் நிறுவனத்தை நம்பியுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிழக்கும் அபாயம் உள்ளது.

அதனால், இந்த 1,600 கோடி ரூபாய்க்கான டெண்டரில், நாக்பூரில் உள்ள சீம் இன்டஸ்ட்ரீஸ், நியாய விலையைவிட 20 சதவிகிதம் குறைவாகக் கேட்டுள்ளது. இது உள்நோக்கம்கொண்டது எனக் கூறி, இந்த ஏலத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். அந்த வழக்கில், டெண்டருக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அசோக் சுந்தரரேசன்மேலும், இந்த நிறுவனம் ரூ.1,300 கோடி மதிப்பிலான பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று தாக்கல்செய்துள்ள விண்ணப்பத்தில், இந்த நிறுவனத்தின்மீதுள்ள வழக்குகள்குறித்து கூறவில்லை. மேலும் இந்த நிறுவனத்தின்மீது, ஏராளமான சிவில் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. அதோடு, சீம் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனம், கடந்த 2015-ம் ஆண்டில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிரா மாநில கரும்பு விவசாயிகளின் பெயரை போலியாகப் பயன்படுத்தி, சுமார் 328 கோடி ரூபாய்க்கு முறைகேடாகக் கடன் பெற்றுள்ள குற்றச்சாட்டும் உள்ளது. இந்த விவரங்களை சீம் நிறுவனம், பெல் நிறுவனத்தில் டெண்டர் எடுத்தால், அதைப் பங்குச்சந்தையில் முதலீடுசெய்து, பொதுமக்களிடமிருந்து பங்குகளை பெறுவதற்கு அனுமதி கோரி அளித்துள்ள விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு குற்றச்சாட்டுகள் உள்ள இந்த சீம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பற்றிய விவரங்களை, பெல் நிறுவனத்தின் விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை. இப்படியான குற்றச்சாட்டுகள் உள்ள நிறுவனத்துக்கு பெல் நிறுவனம் எப்படி விலைப்புள்ளிகளைத் தந்தது?.

எனவேதான், பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளான சீம் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்து, மறு விலைப்புள்ளியை வழங்கி, ஏலத்தை நடத்த வேண்டும்” என்றார்.

பெல்சியா கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில், பெல் நிறுவனம் அறிவித்த டெண்டருக்குத் தடை விதித்த நீதிபதி, பெல் நிறுவனத் தலைவர் இதுகுறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!