திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டடம் இடிந்து விபத்து! பெண் பக்தர் உயிரிழப்பு! அச்சத்தில் பொதுமக்கள்

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பலியாகியுள்ளார். முருகன் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் வள்ளிக்குகை அருகில் உள்ள மண்டபம் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

thiruchendur

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் பக்தர் பேச்சியம்மாள் என்பவர் உயிரிழந்தார். திருச்செந்தூரை சேர்ந்த இவர், கோயிலில் மோர் விற்பனை செய்து வந்துள்ளார். விபத்தின்போது பிராகாரத்தில் நடந்து வந்த 6 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேர் வந்துசெல்லும் இடமென்பதால் இடிபாடுகளில் மேலும், பல பக்தர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. திருச்செந்தூர் கோயிலில் ஏற்பட்டுள்ள விபத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. போலீஸார் பொதுமக்களை கோயிலில் உள்ளே அனுமதிக்கத் தடை விதித்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் திருச்செந்தூர் விரைந்துள்ளார். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!