வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (14/12/2017)

கடைசி தொடர்பு:12:17 (15/12/2017)

கோவை போலீஸின் பக்கா ப்ளான்! வடமாநில கொள்ளையர்களைக் காட்டிக்கொடுத்த 'ட்ரோன்' கேமரா!

கோவையில் ஏ.டி.எம் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த வடமாநில கொள்ளையர்கள், நாமக்கல்லில் கைதுசெய்யப்பட்டனர்.

கோவை, விளாங்குறிச்சி அருகே இண்டஸ் இண்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைந்த கொள்ளையர்கள், சிசிடிவி கேமராக்களை மறைத்துவிட்டு, வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம் மெஷினை உடைத்துள்ளனர். இரண்டு இடங்களிலும் மொத்தம் 29 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனிடையே, இந்தக் கொள்ளையர்கள் நாமக்கல் வழியாக வட மாநிலத்துக்குச் செல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  அதையடுத்து, கோவை மற்றும் நாமக்கல் போலீஸார் கீரம்பூர் சுங்கச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை, ஹரியானா பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரை சோதனை செய்தபோது, அவர்கள் ஏ.டி.எம் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இந்நிலையில், அந்த வழியே வந்த மற்றொரு வெளிமாநில கார் சோதனைக்கு நிற்காமல் சென்றது.  அதனால்,போலீஸார் அந்த காரை துரத்திச் சென்றனர்.

சுமார் 30 கிலோ மீட்டர் துரத்திச் சென்றதும், தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக்குட்டை மேடு என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டுத்  தப்பியோடினர். அவர்களை விடாமல் துரத்திச்சென்ற போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களைக் கைதுசெய்தனர்.

ட்ரோன்

குறிப்பாக, சோளக்காட்டில் பதுங்கியிருந்த கொள்ளையர்ளை ட்ரோன் கேமரா வைப் பயன்படுத்தி போலீஸார் கண்டுபிடித்தனர். தற்போது வரை கோவை ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நாமக்கல்லில் 6 பேரும், சேலத்தில் 3 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல்லில் கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்கள், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடமிருந்து இரண்டு கார்கள், ஒரு ட்ரக் மற்றும் 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.