என் கணவரை மீட்டுத் தாங்க! - ராகுலின் கையைப் பிடித்துக் கதறிய மீனவரின் மனைவி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களை நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.

ராகுல் காந்தி
 

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட பின், முதல்முறையாக தமிழகத்துக்கு வருகைதந்துள்ளார் ராகுல் காந்தி. கடந்த மாதம், கன்னியாகுமரியை நிலைகுலையவைத்துவிட்டுச் சென்றது ஒகி புயல். கடலுக்குச் சென்ற மீனவர்களில் பலர் இன்னும் கரை திரும்பவில்லை.

ராகுல் காந்தி
 

மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கும் காட்சிகள் மனதைப் பதபதைக்கவைக்கிறது. மாயமான மீனவர்களை மீட்டுத் தரும்படி, மீனவக் குடும்பங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் இன்று மதியம் குமரி மாவட்டம் வந்தடைந்தார். அங்கு, தூத்தூர் பகுதியில் உள்ள மக்களோடு மக்களாக அமர்ந்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தூத்தூர் பகுதியில் ராகுல் வருகையையொட்டி பந்தல் எதுவும் போடப்படவில்லை என்பதால், வெயிலில் அமர்ந்திருந்த மக்களுடன் ராகுலும் அமர்ந்துகொண்டார். மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் ராகுலிடம் கண்ணீர் மல்க அவர்களின் நிலையை விளக்கினர். மீனவர்களை மீட்டுத்தரக் கோரி மனுவும் கொடுத்தனர். கடலில் மாயமான மீனவர் ஒருவரின் மனைவி, ராகுலின் கையைப் பிடித்துக் கதறிய காட்சி சுற்றியிருந்தவர்களைக் கண்கலங்கச்செய்தது. 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!