வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (14/12/2017)

கடைசி தொடர்பு:17:50 (14/12/2017)

`நாடாளுமன்றத்தில் உங்களுக்காகக் குரல் கொடுப்பேன்' - குமரி மீனவர்களிடம் ராகுல் காந்தி வாக்குறுதி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குமரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ள ராகுல்காந்தி, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளை நேரில்பார்வையிட வருகை தந்தார். கேரளாவின் பூத்துறை, விழிஞ்சம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், குமரி மாவட்டத்துக்கு வருகை தந்த ராகுல்காந்தி, ஒகி புயலால் கடலில் காணாமல்போன மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கண்ணீர் மல்கத் தங்களின் குறைகளைத் தெரிவித்தனர். கடற்படையினர் புயல் பாதித்ததும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் எனத் தெரிவித்தனர். விவசாயிகளிடமும் அவர் குறைகளைக் கேட்டார்.

பின்னர் பேசிய ராகுல்காந்தி, "தமிழகத்தில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் மீனவர்கள், விவசாயிகள் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. மீன்வளத் துறைக்கென அமைச்சர் இல்லாததால் உங்களுடைய குறைகளைத் தெரிவிக்க முடியாத நிலைமை இருக்கிறது. அதனால், நாடாளுமன்றத்தில் உங்களுக்காகக் குரல் கொடுப்போம். அத்துடன் தமிழக சட்டமன்றத்திலும் மீனவர்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்போம்" என்று பேசினார். ராகுல்காந்தி வருகையைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க