`பணநாயகம் அல்ல... ஜனநாயகத்தில்தான் நம்பிக்கை உள்ளது!' - இடைத்தேர்தல் ஜோரில் ஜெயக்குமார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `இடைத்தேர்தலைப் பணநாயகத்தால் அல்ல, ஜனநாயகத்தை முன்வைத்து சந்திக்கிறோம்' என்று கூறியுள்ளார்.

ஜெயக்குமார்

இது குறித்து அவர் மேலும், `பணநாயகம் அல்ல... ஜனநாயகத்தில்தான் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தினகரன் பணத்தையும் குக்கரையும் நம்பிக்கொண்டிருக்கலாம். அவர் குறுக்கு வழியில் ஓட்டு வாங்கலாம் என்று நினைக்கலாம். ஆனால், அது நடக்காது. அவர் டெபாசிட்கூட வாங்கமாட்டார். கருத்துக் கணிப்பில் தினகரன் வெற்றி பெறுவார் என்பது வெறும் கருத்து திணிப்புதான். எங்களுக்குச் சாதகமாக நாங்களேகூட கருத்துக் கணிப்பை நடத்தலாம். அதனால், கருத்துக் கணிப்பை முன்வைத்து தேர்தலைச் சந்திக்க முடியாது. 2011-ம் ஆண்டு கருத்துக் கணிப்பில், தி.மு.க வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது நினைவிருக்கட்டும்' என்று கடுகடுத்தார். 

மேலும், ஒகி புயலால் கடலில் மாயமான மீனவர்களைத் தேடும் பணி குறித்து பேசிய ஜெயக்குமார், `மாலத்தீவில் தமிழக மீனவர்களின் படகுகள் சில கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. மீனவர்கள் தைரியமானவர்கள். அவர்கள் கண்டிப்பாகக் கரைக்குத் திரும்புவர். மத்திய அரசின் உதவியுடன், முப்படைகளைக் கொண்டு மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 40 படகுகளும் 400 மீனவர்களும் இன்னும் கரை திரும்பவில்லை' என்று தகவல் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!