வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (14/12/2017)

கடைசி தொடர்பு:16:20 (02/07/2018)

கார்த்திகைக் கிழங்குக்கு செம கிராக்கி! - ஆட்டையைப் போடும் கில்லாடித் திருடர்கள்


புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் கார்த்திகைக் கிழங்கைத் திருடும் திருடர்கள் புதிதாக முளைத்திருக்கிறார்கள். மார்க்கெட்டில் ஒரு கிலோ கிழங்கின் விலை 800 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுவதால், அதைத் திருடும் கிழங்குத் திருடர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகக் கொத்தமங்கலம் பகுதி விவசாயிகள் கவலையோடு தெரிவிக்கிறார்கள்.

கார்த்திகை கிழங்கு, பனிக் கிழங்கு என்று சொல்லப்படும் ஒரு வகைக் கிழங்கை கொத்தமங்கலத்தில் ஒன்றிரண்டுப்
பயிரிடுகிறார்கள். கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மட்டுமே இந்தக் கிழங்கு விளையும் என்பதால், இதற்கு கார்த்திகைக் கிழங்கு, பனிக் கிழங்கு என்று பெயரிட்டு இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். தவிர, "கண்வலிக் கிழங்கு என்று சொல்லப்படுகிற காந்தள் கிழங்கை தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கார்த்திகைக் கிழங்கு என்று அழைக்கிறார்கள். இந்தக் கிழங்கு கடுமையான விஷத்தன்மை கொண்டது. இதில் தயாரிக்கப்படும் மருந்துகள் வெளிப்பூச்சுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மூலவியாதிக்கு இந்தக் கிழங்கிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்" என்றும் விஷயமறிந்த ஆசாமிகள் சொல்கிறார்கள்.

`கடவுள் பாதி... மிருகம் பாதி' என்பதுபோல், மருத்துவக் குணமும் விஷத்தன்மையும் கொண்ட இந்த வித்தியாசம் நிரம்பிய இந்தக் கிழங்குத் திருட்டு குறித்து கூடுதல் தகவல்களைச் சேகரித்தோம்.

``பார்ப்பதற்கு சர்க்கரை வல்லிக்கிழங்கு போலவே இருக்கும். கேரளாவிலிருந்து அதிக வணிகர்கள் புதுக்கோட்டைக்கு நேரில் வந்து இதை வாங்கிச் செல்கிறார்கள். அங்குள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் இந்தக் கிழங்கைப் பயன்படுத்தி, சூரணம், பற்பம், லேகியம் போன்றவற்றைத் தயார் செய்கின்றனர். இந்தக் கிழங்குக்கு சந்தையில் நல்ல விலையும் கிராக்கியும் இருக்கிறது. இதை அறிந்த கிழங்குத் திருடர்கள், இரவோடு இரவாகப் பெரிய சாக்குப்பையும் சிறு கருக்கு அரிவாளுடன் கார்த்திகைக் கிழங்கு பயிரிடப்படும் கொல்லைகளில் நுழைந்துவிடுகிறார்கள். சப்தமில்லாமல் செடியைப் பிடுங்கி, அடியில் இருக்கும் கிழங்கை அறுத்து எடுத்து சாக்குப் பையில் போட்டுக்கொண்டு கம்பிநீட்டி விடுகிறார்கள். வாராவாரம் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் நடக்கும் சந்தையில் அந்தக் கிழங்கை விற்றுவிடுவார்கள். ஒரு மூட்டையில் குறைந்தபட்சமாகப் பத்திலிருந்து 20 கிலோ வரை ஆட்டையைப் போட்ட கிழங்கு இருக்கும். அந்தவகையில், 14,000 ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 20,000 ரூபாய் வரை பணம் பார்த்துவிடுகிறார்கள். உழைக்காமலேயே கொழுத்தக் காசு சம்பாதித்துவிடுகிறார்கள் இந்தக் கிழங்குத் திருடர்கள்" என்றார்கள்.

இது குறித்து புகார்கள் ஏதும் காவல்துறைக்கோ வருவாய்த் துறையினருக்கோ விவசாயிகள் சார்பாக இன்னும் கொடுக்கப்படாததால், தற்போது, கிழங்குத் திருடர்கள் காட்டில் பணமழை பொழிகிறது.