'தனிக் கழிப்பறை வசதிகூட இல்லை!' - மாநாட்டைக் கூட்டும் வங்கிப் பெண் ஊழியர்கள் | women bank employees didn't have separate toilet in their workspace

வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (14/12/2017)

கடைசி தொடர்பு:08:06 (15/12/2017)

'தனிக் கழிப்பறை வசதிகூட இல்லை!' - மாநாட்டைக் கூட்டும் வங்கிப் பெண் ஊழியர்கள்

வங்கி

பொதுத்துறை வங்கிகளில் பெண் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து மாநாடு ஒன்றைக் கூட்டியுள்ளன வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள். 'தூய்மை இந்தியா பிரசாரத்துக்காக நாடு முழுவதும் செல்லும் பிரதமருக்குக்கூட எங்களின் கவலைகள் தெரிவதில்லை' என்கின்றனர் வங்கிகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள். 

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், மக்கள் பயனடைந்தார்களா... இல்லையா' என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை' பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி, தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகள் என மத்திய அரசு அறிமுகப்படுத்தும் அனைத்துத் திட்டங்களிலும் அதிகம் பாதிக்கப்படுவது வங்கி ஊழியர்கள்தான்' எனக் குமுறுகின்றனர் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர். 'பணிச்சுமை அதிகரிக்கும் சூழலில் வங்கிப் பணியாளர்களில் அதிகம் பாதிக்கப்படும் பட்டியலில் பெண் வங்கி ஊழியர்கள் உள்ளனர். பெண் ஊழியர்களுக்கு அடிப்படை வசதியையாவது செய்துகொடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் அனைத்து வங்கி ஊழியர்களும் வருகிற 17-ம் தேதி 3 வது தேசிய பெண்கள் மாநாட்டை நடத்த உள்ளனர். 

பிரேமலதாஇந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநாட்டு செயலாளர் பிரேமலதாவிடம் பேசினோம். “நாட்டின் முதுகெழும்பான வங்கித்துறையைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி என மக்களை வாட்டிவதைக்கும் செயலைக் கண்டித்தும் இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த வகையில் வங்கித்துறையில் பெண் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து யாரும் கண்டுகொள்வதே இல்லை. சட்டமும் விதிமுறைகளும் ஏற்புடையதாக இருந்தாலும் எதுவும் நடைமுறையில் இல்லை. 'தூய்மை இந்தியா' என ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்து வரும் பிரதமர், நாட்டின் முக்கிய வங்கித்துறையில் பணிபுரியும் பெண்களுக்குத் தனிக் கழிவறைக்கூட இல்லை என்பதை உணராமல் விட்டுவிட்டார். சென்னை போன்ற பெரு நகரங்களில்கூட பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு எனத் தனியாகக் கழிப்பிடம் இல்லை. கிராமப்புற வங்கிகளின் நிலையோ இதைவிடவும் மோசம். இதேபோன்ற பணி இடமாற்றக் கொள்கை, பணிச்சுமை, குழந்தை வளர்ப்பு, பணியிட பாலியல் தொல்லைகள் எனப் பெண் ஊழியர்களை வதைக்கும் பிரச்னைகள் ஏராளம். எல்லாவற்றுக்கும் தகுந்த சட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளன. ஆனால், நடைமுறையில் எந்தவொரு விதிமுறையும் மத்திய அரசு செய்துகொடுப்பதில்லை. இதைக் கண்டித்து வரும் 17-ம் தேதி சென்னையில் நடக்கும் தேசிய வங்கி ஊழியர்கள் மாநாட்டில் எங்களது கடும் எதிர்ப்பை முன்வைக்க இருக்கிறோம்” என்றார் கொதிப்புடன்.