"மனிதநேயம் தம்பியையும் கொல்ல அலையுறாங்க" - புதுக்கோட்டையில் தடுக்கப்பட்ட ஆணவ படுகொலை

டந்த பன்னிரண்டாம் தேதி உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னோர் ஆணவ படுகொலை நிகழ்வதற்கான சூழல்கள் சப்தமில்லாமல் அரங்கேறிக்கொண்டிருந்தன. மனிதநேயம் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞரை மனிதநேயமே இல்லாமல் படுகொலை செய்ய சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கொலைவெறித் கும்பல். இதன் பின்னணியில் இருப்பதும் சாதிய மறுப்புத் திருமணம்தான். படபடக்கும் அந்த நிமிடங்களையும் அந்தக் காதல் ஜோடி பற்றிய விவரங்களையும் பார்ப்போம்

.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டைவாய்த்தலையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சுவிதா. இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சுவிதா உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர். அதே கல்லூரியில் சுவிதாவுடன் இணைந்துப் படித்தவர் மனிதநேயம். இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள மேலத்திம்மாக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்குள்ளும் மனம் ஒத்துப் போக, காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கல்லூரியில் படித்தாலும் சமூக நிகழ்வுகளை அறிந்தவர்களாக இருவரும் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை விவகாரம், அதன் வழக்கு, கௌசல்யா தனது அப்பாவுக்குத் தண்டனை கிடைக்கக் காட்டும் தீவிரம், ஆணவப் படுகொலைகள் பற்றிய விவரங்கள் அத்தனையும் இருவரும் தங்களுக்குள் விவாதித்து இருக்கிறார்கள். தாங்களும் இப்படியான நெருக்கடிகளைக் கடக்கவேண்டியதிருக்கும் என்பதை மனிதநேயமும் சுவிதாவும் நன்றாகவே புரிந்துவைத்திருந்தார்கள். மனிதநேயம் தரப்பில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்பதை புரிந்துவைத்திருந்த சுவிதாவுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அவரது குடும்பம்தான்.
தனது காதல் விசயத்தை பெற்றோரிடம் சுவிதா சொன்னபோது, அவர் எதிர்பார்த்தது போல், கடுமையான எதிர்ப்பும் அடக்குமுறைச் செயல்களும் சுவிதாவின் பெற்றோர், உறவினர்களின் தரப்பிலிருந்து எழுந்தது. தவிர,வழக்கம்போல் உறவுப் பையன் ஒருவருக்கு சுவிதாவைக்  கட்டாயத்திருமணம் செய்துவைக்கவும் அவசரகதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இப்படியெல்லாம் தங்களது காதல் விசயத்திலும் நடக்கும் என்பதை மனிதநேயமும் சுவிதாவும் கணித்து, மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்திருந்தார்கள். அந்த ஏற்பாட்டின்படி, கடந்த நவம்பர் 16தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார்கள். இதனைக் கேள்விப்பட்ட சுவிதாவின் தகப்பனார் செல்வம், மனிதநேயம் அக்காவான 'சுயமரியாதை'யும் அவரது கணவரும் தனது மகளைக் கடத்திவைத்திருப்பதாகக் கூறி,மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து,கடந்த பனிரண்டாம் தேதியன்று சுவிதாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த மனிதநேயமும் அவரது சகோதரியும் உறவினர்களும் சென்றிருக்கிறார்கள். அன்றுதான் உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. நீதிபதியிடம் சுவிதா மிகத் தெளிவாக,"தன்னை யாரும் கட்டாயப்படுத்தியோ,கடத்தியோ கொண்டு வரவில்லை. நான் எனது கணவரோடுதான் இருக்கிறேன்"என்று கூறிவிட்டார். நீதிபதி, சுவிதாவை மனிதநேயமுடன் அனுப்பி வைத்தார். இருவரும் தன் உறவுகளின் பாதுகாப்புடன் அரசு பேருந்தில் தங்களது ஊருக்குப் பயணப்பட்டிருக்கிறார்கள்.
பேருந்து கீழவளவு வந்தபோது, சுவிதாவின் உறவினர்கள் கார்களில் விரைந்து வந்து,பேருந்தை மறித்து, சுவிதாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தாங்கள் வந்த வாகனத்தில் விரைந்து சென்றிருக்கிறார்கள். உடனடியாக வாகனங்களின் நம்பர்களைக் குறித்துக்கொண்ட மனிதநேயம் கீழவளவு காவல்நிலையத்துக்கு விரைந்துசென்று புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறை சுணக்கம் காட்டவே, மனிதநேயம் உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட மார்க்ஸிஸ்ட் செயலாளரான கவிவர்மனுக்கு போன் செய்து நிலவரத்தை சொல்லியிருக்கிறார். அவர் கொஞ்சமும் தாமதிக்காமல் அன்றைக்கு வேறொரு நிகழ்வுக்காக மதுரை வந்திருந்த மாதர் சங்கத்தின் தலைவியான உ.வாசுகியிடம் கூறியிருக்கிறார். அவர் உடனடியாக மதுரை எஸ்.பி.அலுவலகத்துக்கு நேரிலேயே சென்றிருக்கிறார். அன்றைக்கு என்று மதுரை எஸ்.பி.மணிவண்ணன் விடுப்பில் இருக்க, கூடுதல் பொறுப்பாக மதுரையைக் கவனித்துவந்த விருதுநகர் எஸ்.பி.சக்திவேலிடம் உ.வாசுகி நிலவரத்தை விவரிக்க, அவர்கள் கீழவளவு காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு சுவிதாவை மீட்கும் நடவடிக்கையைத் தாமதிக்காமல் மேற்கொள்ளும்படி உத்தரவிட, அதன்பிறகே காவல்துறை சுறுசுறுப்பானது. தவிர, மதுரை, விருதுநகர், கரூர் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த தனிப்படையும் உடனடியாக சுவிதாவைத் தேடும் பணியில் ஈடுபட்டது. இந்த நிலையில், கரூர் அருகே பசுபதி பாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் சுவிதாவைக் கடத்தி வந்த வாகனம் பிடிபட்டது. ஆனால், அந்த வாகனத்தில் ஓட்டுநரை தவிர வேறு யாரும் இல்லை. காவலர்கள் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தபோது, சுவிதாவை அருகில் உள்ள அவரது அத்தையின் வீட்டில் விட்டு வந்த விவரத்தைக் கூறியிருக்கிறான். ஓட்டுநரைக் கூட்டிக்கொண்டு அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த காவலர்கள், அங்கிருந்தவர்களை சுதாரிக்கவிடாமல், சுவிதாவைப் பாதுகாப்புடன் மீட்டு அனுப்பி வைத்திருக்கிறது. இப்போது, மனிதநேயமும் சுவிதாவும் மிக ரகசியமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை புதுக்கோட்டை மாவட்ட மார்க்ஸிஸ்ட் செயலாளர் கவி வர்மன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்."  'உடுமலைப்பேட்டை சங்கரைப் போலவே மனிதநேயம் தம்பியையும் கொல்லப்போறோம்'னு மிரட்டுறாங்க. இரண்டு பேரையும் நாங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கும் வரை அவங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அதனால், அவர்களிடம் பேச இப்போது முடியாது. ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாதுகாப்பில் இருக்கும் அவர்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல..பயமில்லாத வாழ்க்கைச் சூழலை அமைத்துத் தருவதும் எங்கள் கட்சியின் கடமை"என்றார்.
இரண்டு பேரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவர்களை என்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்ற தகவலும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!