வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (14/12/2017)

கடைசி தொடர்பு:08:05 (15/12/2017)

கடலூரில் ஆளுநர் ஆய்வு நடத்தினால் கறுப்புக்கொடி காட்டுவோம்! பொங்கும் தி.மு.க

மாநில சுயாட்சிக்கு விரோதமாக ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநருக்கு எதிராக தி.மு.க. சார்பில்  அறவழியில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் லயன்ஸ் கிளப் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்குச் செயற்கைக் கால் மற்றும் முடநீக்கு கருவிகளை ஆளுநர் வழங்குகிறார். இவ்விழா முடிந்த பிறகு, இரவு கடலூர் சுற்றுலா மாளிகையில் தங்கி, காலை ஆய்வு மேற்கொள்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் அறவழியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை துஷ்பிரயோகப்படுத்தும் விதமாகவும் தமிழக ஆளுநர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியதை ஏற்கெனவே தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்து, "கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இதுபோன்ற செயல்களில் ஆளுநர் ஈடுபடக் கூடாது"  என்று தெரிவித்திருந்தார்.

மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஆளுநர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார். ஆனால், கடலூர் மாவட்டத்தில் நாளை ஆளுநர் மீண்டும் ஆய்வு மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் திட்டமிட்ட சதி என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதற்கு எடப்பாடி அரசும் மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டது. பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் இதுபோன்று ஆய்வுகள் மேற்கொள்ளாதது ஏன்? இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் அறவழியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.