வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (14/12/2017)

கடைசி தொடர்பு:21:20 (14/12/2017)

ராமநாதபுரம் மாவட்ட பேரிடர்மீட்பு அலுவலர்களுக்கு வாக்கிடாக்கி கருவி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை பேரிடரின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களது உடைமைகளைக் காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மீட்பு அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தின் போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைக் காக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் ஏற்படும் பேரிடரினால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ள 38 பகுதிகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அப்பகுதிகளுக்கு என சிறப்புக் கண்காணிப்புக்கு எனத் தனியாக 15 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிகளை மேம்படுத்தும் வகையில் பேரிடர் மீட்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முக்கிய அலுவலர்களான மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர், கோட்டாட்சியர்கள், பஞ்சாயத்து உதவி இயக்குநர் மற்றும் மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர்களுக்கு வாக்கி டாக்கி கருவிகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் , கோட்டாட்சியர் பேபி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.