வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (14/12/2017)

கடைசி தொடர்பு:09:18 (15/12/2017)

மலேசியாவில் தவிக்கும் பட்டுக்கோட்டை பெண்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பானுப்ரியா. கணவனை இழந்த இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது தாய் பங்கஜவள்ளியின் அரவணைப்பில் இருந்துவந்தார். வறுமையான சூழலில் இருந்த பானுப்ரியாவுக்கு மலேசியாவில் உள்ள ஓர்  உணவகத்தில் காய்கறி நறுக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அங்கு அனுப்பப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளார்.

 

பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் வசித்துவந்த பானுப்ரியாவுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மலேசியாவில் உள்ள ஓர் உணவகத்தில் காய்கறி நறுக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சில மாதங்களுக்கு முன் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவருக்கு உணவகத்தில் வேலை தரவில்லை. பாலியல் விடுதி ஒன்றில் விற்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பியவர், சமூக நல ஆர்வலர்களின் உதவியுடன் மலேசியக் காவல்துறையினரிடம் தஞ்சமடைந்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, அங்குள்ள அரசுக் காப்பகத்தில் தொடர்ச்சியாகத் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் பானுப்ரியா. அங்கு தனியாக தவித்துக்கொண்டிருக்கும் தனது மகள் பானுப்ரியாவை மலேசியாவிலிருந்து மீட்டுக்கொண்டு வர தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடியுள்ளார் பானுப்ரியாவின் தாய். தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக இந்தியா மற்றும் மலேசிய தூதரகத்தை தொடர்புகொண்டு, பானுப்ரியாவை பட்டுக்கோட்டை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.