ஆளுநர் வருகை: அவசரகதியில் ரோடுகள்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  நாளை கடலூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதற்காக, கடலூர் நகரம் முழுவதும் உள்ள சாலைகளை மாவட்ட நிர்வாகம் அவசரகதியில் சீரமைத்து வருகிறது.


  

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொந்தத் தொகுதியான கடலூர் நகரம் முழுவதும் உள்ள சாலைகள் மழையின்போது பல்லிளித்துக்கொண்டு குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. மழை விட்டாலும், சாலைகளால் உண்டான அவஸ்த்தைகள் இன்னும் விடவில்லை. சாலைகள் அனைத்திலும் புழுதிதான். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் எனப் பலரும்  பாதிக்கப்பட்டு விபத்துக்குள்ளாகி வருகிறார்கள். இதனை மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் கண்டுகொள்ளவே இல்லை.


    

இதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவித்து நூதனப் போராட்டம், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் பொதுமக்கள் சார்பில் பல கண்டன ஆர்ப்பாட்டங்கள் எனப் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தினர். இதற்கெல்லாம் கொஞ்சமும் அசராத மாவட்ட நிர்வாகமும் அமைச்சரும், ஆளுநர் ஆய்வு மேற்கொள்ள வருகை என்றதும் வரிந்துகட்டிக்கொண்டு அவசரகதியில் சாலைகளைச் சீரமைத்து வருகிறார்கள். ``இதைத்தானே நாங்களும் கேட்டோம். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத மாவட்ட நிர்வாகம் ஆட்சியாளர்களின் ஆட்டங்களுக்குத்தான் மதிப்பளிக்கிறது. அப்படியென்றால், மாதத்துக்கு ஒருமுறை முதல்வர் அல்லது ஆளுநர் இந்தக் கடலூருக்கு வரவேண்டும். அப்போதுதான் அரசு அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுவார்கள் போலிருக்கு. மக்கள் நலன்களுக்குத்தான் அதிகாரிகளே தவிர, ஆட்சியாளர்களின் நலனுக்கு இல்லை என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அதை விரைவில் புரிய வைப்பார்கள்" என்கிறார்கள் கடலூர் வாசிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!