கண்ணீரில் மிதந்த ஆய்வாளர் பெரியபாண்டியனின் சொந்த ஊர்..! 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்

ராஜஸ்தானில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக நாதுராம், தினேஷ் சௌத்ரி என்கிற இருவரைப்  பிடிக்க ராஜஸ்தானுக்கு தமிழகப் போலீஸார்  தனிப்படை அமைத்துச் சென்றிருந்தனர். ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்தவர்களைப் பிடிக்க, தமிழக போலீஸார் முயன்றனர். அப்போது, இரு தரப்புக்குமிடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்து, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

விமானம் மூலம் சென்னை வந்த அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், விமானம் மூலம் மதுரை சென்ற அவரது உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸில் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில், மூவிருந்தாளி கிராமத்துக்கு இரவு 11 மணி அளவில் கொண்டுசெல்லப்பட்டது.

அவரது உடலுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பெரியபாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் அவரது சொந்த இடத்திலேயே 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!