வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (15/12/2017)

கடைசி தொடர்பு:08:00 (15/12/2017)

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..! பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இந்தத் தொடரில், குஜராத், இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்று தெரிகிறது. 

இன்று, மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும். இதைத்தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை மீண்டும் கூட்டம் தொடங்கும். அன்றைய தினம் இரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. வரும் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், விவாகரத்து பெறும் இஸ்லாமியப் பெண்களுக்குப் பராமரிப்புத் தொகை பெறுவது தொடர்பான மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள 25 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது. 

வங்கிகளில் மக்கள் வைத்துள்ள முதலீடுகளை சம்பந்தப்பட்ட வங்கிகள் பயன்படுத்திக்கொள்ள வகைசெய்யும் 'நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதா' தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, நாடு முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, "கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தனியாகக் கூடி, நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய விஷயங்கள்குறித்து ஆலோசனை நடத்தியுள்ளன. இதற்கிடையே, நேற்று கன்னியாகுமரிக்கு வந்த காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி, "மீனவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்" என்று உறுதியளித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க