வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (15/12/2017)

கடைசி தொடர்பு:08:28 (15/12/2017)

கஞ்சா விற்பவர்கள்மீது புகாரளித்த தொழிலாளி: மிரட்டலால் தீக்குளிப்பு!

கஞ்சா விற்பவர்கள் மீது புகார் அளித்தற்காக மிரட்டப்பட்ட சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி தீக்குளித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமாவாசை

திருச்சி ஸ்ரீரங்கம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் அமாவாசை. 63 வயதான இவர் புதுத்தெருவிலுள்ள தனது குடும்பத்தைப் பிரிந்து ஸ்ரீரங்கத்தில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழில் செய்துவருகிறார்.

இந்நிலையில் ஶ்ரீரங்கம், முசிறி, சத்திரம் போன்ற பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், ஸ்ரீரங்கம் பகுதியில் ஜேம்ஸ் அவரது மனைவி, ரெங்கேஷ் மற்றும் கணேஷ் உள்ளிட்டோர் கஞ்சா விற்பதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், கஞ்சா விற்பனைகுறித்து புகார் அளித்த அமாவாசையை ஜேம்ஸ் தலைமையிலான கும்பல், தாக்கியதில் அமாவாசையின் கையில் எலும்பு முறிந்து சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் ரிக்ஷா தொழிலை செய்ய ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரே அம்மா உணவகம் அருகில் தனது ரிக்ஷாவை நிறுத்திய அமாவாசை, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீயை வைத்துக்கொண்டதுடன், தீ உடலில் பற்றி எரியும்போதே நால்வர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தனது உயிர் போனாலும் பரவாயில்லை. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பது நிற்கவேண்டும் எனக் கத்தியபடி கூறினாராம்.

இந்நிலையில், அப்பகுதியில் டீக்குடிப்பதற்காக அந்த வழியே வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புவீரர்கள், அமாவாசை உடலில் பற்றி எரிந்த தீயை அனைத்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்குத் தீக்காய பிரிவில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்துவரும் அமாவாசை, இரு தினங்களுக்கு முன்பு, கஞ்சா விற்பனை செய்யும் கும்பல், அடித்து உன்னைக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும், இதனால் மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும், ஶ்ரீரங்கத்தில் கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா விற்பனையைத் தடுக்க வேறு வழியில்லை என முடிவு செய்து இப்படி நடந்துகொண்டதாகவும், தீக்குளித்த ரிக்ஷா தொழிலாளி அமாவாசை பேசிய ஆடியோ இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான கும்பல் இரண்டு வாலிபர்களைச் சரமாரியாக அரிவாளால் தாக்கியதும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவைசேர்ந்த மகேஸ்வரன் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா வியாபாரம் செய்து வருவதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும்,மோதல் ஏற்பட்டுள்ளது, கஞ்சா விற்பது மட்டுமல்லாமல் அடிதடி, திருட்டு உள்ளிட்டவற்றில் கில்லாடியான மகேஸ்வரன்மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. கடந்தவாரம் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுரேஷ் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்குத் தனது கூட்டாளிகளுடன் வந்த மகேஷ்வரன், சுரேஷை துவைத்து எடுத்தனர். அடுத்து சுரேஷ் மற்றும் அவரது அண்ணன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இப்படியான சூழலில் திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை முற்றிலுமாக தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வந்த தொழிலாளி அமாவாசை தற்போது சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க