டி.எஸ்.பி உயிரைப் பறித்த அரசுப் பேருந்து!

கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் (PCR unit - சமூக நீதி மனித உரிமைகள்) சண்முகசுந்தரம் திருவண்ணாமலை அருகே விபத்தில் பலியாகியுள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஏ.டி.ஜி.பி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு கிருஷ்ணகிரி திரும்பியுள்ளார் சண்முகசுந்தரம். மண்ணில் வாழ்ந்து மறைந்த சித்தர்கள் சன்னதிக்குச் சென்று திரும்பினால் குரு எட்டாமிட பாதிப்பில் இருந்து தப்பலாம் என்ற ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் நண்பர் சுதாகருடன் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமம் சென்று வணங்கிவிட்டு அப்படியே கிருஷ்ணகிரி திரும்பிவிடலாம் என திட்டமிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலை வந்துள்ளனர். 

கிருஷ்ணகிரி டிஎஸ்பி சண்முகசுந்தரம்

ஆனால், திருவண்ணாமலை டு சென்னை நெடுஞ்சாலையில் திருவண்ணாமலைக்கு 5 கி.மீட்டர் முன்பாக நேற்று இரவு சுமார் 1.30 மணிக்கு தென்னரசம்பட்டு என்ற இடத்தில் அரசுப் பேருந்தும் அவரது காரும் நேருக்கு நேர் மோதியதில் டி.எஸ்.பி சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவரது நண்பர் சுதாகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட்டில் இன்ஸ்பெக்டராக இருந்த சண்முகசுந்தரம், டி.எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற்று மீண்டும் கிருஷ்ணகிரியிலேயே பணியாற்றியுள்ளார். 

இவருக்குச் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், ஞானசக்தி என்ற மனைவியும், விவேதிதா என்ற மகளும் இருக்கின்றனர். மகள் நிவேதிதா பி.டி.எஸ் படித்துவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!