வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (15/12/2017)

கடைசி தொடர்பு:13:05 (15/12/2017)

சனிப்பெயர்ச்சி விழாவுக்குத் தயாராகும் கங்கைகொண்ட சோழபுரம்! அனைத்து வசதிகளும் தயார்

சனிப்பெயர்ச்சி விழாவுக்காக கங்கை கொண்ட சோழபுரம் தயாராகி வருகிறது. விழாவை சிறப்பாக நடத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வரும் டிசம்பர் 19-ம் தேதியன்று சனிப் பெயர்ச்சிவிழா நடைபெறுகிறது. விழாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ டீனாகுமாரி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் தாசில்தார் வேல்முருகன், டி.எஸ்.பி கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை கோயில் செயல்அலுவலர் பரிமணம், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ஒன்றிய துணை ஆணையர் செல்வம், தொல்லியல்துறை ஜோதி, சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் மற்றும் மணிவண்ணன் தீயணைப்பு நிலைய அலுவலர் தமிழ்வாணன், மின்சார வாரியம், போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

                           


சனிப்பெயர்ச்சி விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வர இருப்பதாக அனுமானித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து ஆலோசனைகள் ஆர்.டி.ஓ வழங்கினார். டி.எஸ்.பி தலைமையில் சட்டம் -ஒழுங்கு, அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு போலீஸாரின் பாதுகாப்புப் பணிகள் இருக்கவும், மருத்துவர்கள், செவிலியர்கள், அவசரகால ஊர்தி, சுகாதார மருத்துவம், பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ வசதி ஆகியன தயார் நிலையில் இருக்கவும், சனிப்பெயர்ச்சி விழாவின்போது போக்குவரத்து துறையினர் கங்கைகொண்டசோழபுரத்துக்கு பக்தர்களின் வருகைக்கு ஏற்ப சிறப்பு பேருந்து வசதிகள் செய்திட வேண்டும் எனவும், வட்டார வளர்ச்சித்துறை சார்பிலும், நகராட்சி சார்பிலும் கங்கைகொண்டசோழபுரத்தில் தற்காலிக குப்பைத் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டியில் சுகாதார குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தேவையான தீத்தடுப்பு சாதனங்களுடன் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.

மின்சார வாரியத்தினர் தடையின்றி மின்சாரத்தை விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வலியுறுத்தினார். மேலும் விழாவினை நல்லமுறையில் நடத்தி மாவட்டத்துக்கு நற்பெயர் எடுத்துத்தரவேண்டும் எனக் கூறினார். கூட்டத்தில் ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.