வெரிஸானை அடுத்து ஆள்குறைப்பில் ஐ.டி நிறுவனங்கள்! - மனநலப் பாதிப்பில் ஊழியர்கள்

வெரிஸான்

வெரிஸான் ஐ.டி நிறுவனத்துக்கு எதிராகக் கொந்தளிக்கின்றனர் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள். ' ஒரேநாளில் அதிகமான பணியாளர்களை வெளியேற்றினால் கேள்வி எழும் என்பதற்காக, நாளொன்றுக்கு மூன்று பேர் வரையில் வேலையைவிட்டு நீக்கப்படுகிறார்கள். இப்படியொரு புதுமையான திட்டத்தைச் செயல்படுத்துகிறது வெரிஸான்' என்கின்றனர் ஐ.டி ஊழியர்கள்

சென்னையில் ஒலிம்பியா டெக் பார்க் மற்றும் தரமணி ஆர்.எம்.எக்ஸ் வளாகங்களில் செயல்படும் வெரிஸான் நிறுவனம், கடந்த 12-ம் தேதி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய கிளைகளிலிருந்து ஒரே நாளில் 993 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குண்டர்கள் துணையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இப்படியோர் அதிரடியில் இறங்கும்போது, ஊழியர்களுக்கு ஏதாவது நேரலாம் என்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை வளாகத்தில் நிறுத்தியிருந்தது. வெரிஸானின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தன ஐ.டி ஊழியர் சங்கங்கள். இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தைத் தொடங்க இருக்கிறது. வெரிஸானைப் போலவே, மேலும் சில ஐ.டி நிறுவனங்களும் ஆட்குறைப்புத் திட்டத்தை சத்தமில்லாமல் அமல்படுத்தி வருகின்றன. நாளொன்றுக்கு இரண்டு பேர், மூன்று பேர் எனப் பணியிழந்து வருகின்றனர். 

அழகுநம்பிஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கினிடம் பேசினோம். “வெரிஸான் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டது என்பது தொழிலாளர் விரோத நடவடிக்கை. இதைக் கண்டித்தும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, தொழிலாளர் நல ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்; நீக்கம் செய்வதென்றால் மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் பணியாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த இருக்கிறோம்.

ஐ.டி நிறுவனப் பணியாளர்களை திடீரென நீக்குவது; இழப்பீடு வழங்காமல் வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக முறையான சட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும். இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையரிடம் வலியுறுத்த இருக்கிறோம். கடந்த சில நாள்களாக வெரிஸான் பணியாளர்கள் மிகுந்த மனரீதியான அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தொழிலாளர் நல ஆணையரின் நடவடிக்கைகளைப் பொறுத்தும் வெரிஸான் நிர்வாகத்தின் விளக்கத்தை வைத்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!