'தினகரனுக்கு இப்படித்தான் 'செக்' வைக்கணும்' - புதிய ப்ளானில் பன்னீர்செல்வம் 

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

தினகரன் பிரசாரத்துக்கு செக் வைக்கும் வேலையில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரனின் பிரசாரத்தைக் கண்காணிப்பதோடு அவரது ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகள் மீறும்பட்சத்தில் அதை ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு புகாராக கொடுக்கவும் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆளுங்கட்சியின் செல்வாக்கு, அமைச்சர்களின் அதிகார பலம், கூடுதலாக இரட்டை இலைச் சின்னம் என களமிறங்கிய மதுசூதனன், தொகுதி முழுவதும் வலம் வருகிறார். இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்து அ.தி.மு.க.வினருக்கு சவாலாக தினகரன் இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித அடிப்படைவசதிகள் செய்துகொடுக்கவில்லை என்ற ஆதங்கத்திலிருக்கும் வாக்காளர்களை தங்களுக்கு சாதகமாக்கிவருகின்றனர் தி.மு.க.வினர்.

மற்ற மாநிலங்களில் வெற்றி வாகையைச் சூடியதுபோல ஆர்.கே.நகரிலும் தாமரைச் சின்னம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க.வினர் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஆறுநாள்களே இருப்பதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜெயலலிதா அறிவித்த திட்டங்களைச் சொல்லி அ.தி.மு.க.வினர் இரட்டை இலைச் சின்னத்துக்கு ஓட்டுகேட்டுவருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் மனநிலையை கண்டறியும்வகையில் உளவுப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு போலீஸார் அங்கேயே முகாமிட்டு உடனுக்குடன் தகவல்களை ரிப்போர்ட்டாக கொடுத்துவருகின்றனர். அந்த ரிப்போர்ட் அடிப்படையில்  தொகுதியில் அ.தி.மு.க. பலவீனமாக இருக்கும் வார்டுகளில் கூடுதல் கவனம் செலுத்த கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

தேர்தல் பிரசாரம் குறித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தினமும் ஆலோசனை நடத்திவருகின்றனர். சில நாள்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் பொறுப்பாளர்களுக்கு நீண்ட நேரம் பாடம் எடுத்துள்ளார். அப்போது, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒற்றுமையாக செயல்படவேண்டும். எனவே, இந்த தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அம்மா (ஜெயலலிதா) வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அம்மா மறைவுக்குப்பிறகும் மக்களிடையே அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருப்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும். தேர்தலில் உள்ளடி வேலைகளில் ஈடுபடுவோர்குறித்து ஆதாரத்துடன் புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டை இலைச் சின்னத்துக்கு எதிராக அ.தி.மு.க.வில் சிலர் வேலை செய்வது அம்மாவுக்கு செய்யும் துரோகம். அவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது. தினகரனுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர்களுக்கு இந்தத் தேர்தலின் முடிவு ஒரு பாடமாக அமையும்" என்று பேசியிருக்கிறார்.

அடுத்து, தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் கொடுக்கும் தகவல் கிடைத்தால் அதை ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் நாமும் கவனமாக செயல்படவேண்டும். எதைச் செய்தாலும் ப்ளான் பண்ணிச் செய்யுங்கள் என்று தேர்தல் பொறுப்பாளர்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்தே, தினகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு குக்கர் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தேர்தல் ஆணைய அதிகாரிகளும் வருமான வரி அதிகாரிகளும் குறிப்பிட்ட ஒரு கடையில் சோதனை நடத்தினர். தொடர்ந்து தினகரனின் பிரசாரத்துக்கு செக் வைக்கும் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த அ.தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். தினகரனின் பிரசாரத்தைக் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்கவும் உளவுப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு போலீஸாருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். தினகரன் தரப்பில் ஓட்டுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் கொடுத்தால் அதை செல்போனில் வீடியோவாகவும் எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதனால் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!