வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (15/12/2017)

கடைசி தொடர்பு:13:12 (15/12/2017)

ராஜஸ்தான் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கைது! நாதுராமனைக் குறிவைக்கும் போலீஸ்

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளியைக் குடும்பத்துடன் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். அடுத்தடுத்து கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கொள்ளைக்கும்பல் தலைவன் நாதுராமன் விரைவில் சிக்குவார் என்று தெரிகிறது.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, கொளத்தூரில் நடந்த நகைக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்ய ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் பெரியபாண்டியன் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் கொள்ளையர்களைச் சுற்றி வளைக்கும்போது கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். மேலும் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்ளிட்ட 4 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, சென்னை மேற்கு மண்டலக் காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ்குமார் ராஜஸ்தான் சென்றார். அம்மாநிலக் காவல்துறையினருடன் இணைந்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதன் பின்னர் காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையால் நாதுராமின் கூட்டாளி தினேஷ் சவுத்ரியைக் காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். கொள்ளைக்கும்பல் தலைவன் நாதுராமைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், கொள்ளையன் நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூட்டாளி தேஜாராம், அவரின் மனைவி பித்யா, மகள்கள் சுகுணா, ராஜல் ஆகியோரை ஜெயத்ராம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். நாதுராம் பதுங்கியிருந்த சுண்ணாம்புக் கல் சூளையின் உரிமையாளராகத் தேஜாராம் உள்ளார். கொள்ளையன் நாதுராம் பதுங்கியுள்ள இடம் குறித்து நான்கு பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் கும்பல் தலைவன் நாதுராமன் சிக்குவார் என்று தெரிகிறது. நேற்றிரவு கைது செய்யப்பட்ட கொள்ளையன் தினேஷ் சவுத்ரியைச் சென்னை கொண்டுவர தமிழக காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.